மதுரை :முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை
எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆக.,22 மாலை 4 மணிக்கு மதுரையில் பாராட்டு
விழா நடக்கிறது.பாண்டி கோயில் ரிங்ரோட்டில் நடக்கும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விவசாய சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, சுந்தரராஜன், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.பி.,க்கள் பார்த்திபன், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், செந்தில்நாதன், அன்வர்ராஜா மற்றும் தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், செயலாளர்கள், மேயர் ராஜன்செல்லப்பா உட்பட ஆறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பெரியாறு பாசன திட்டக்குழு உறுப்பினர் அருள்பிரகாசம் கூறுகையில், "போதிய தண்ணீர் இல்லாததால் 35 ஆண்டுகளாக தென் மாவட்ட விவசாயிகள் துயரத்திலும், சோகத்திலும் இருந்தோம். பலமுறை கோர்ட் வலியுறுத்தியும் விமோசனம் கிடைக்கவில்லை. இப்போது, ஜெ.,வை வாழும் பென்னிகுயிக்காக பார்க்கிறோம்," என்றார்.விவசாயிகள் சங்கத் தலைவர் மாணிக்கம் கூறுகையில், "பாராட்டு விழாவிற்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. விவசாயிகளால் நடத்தப்படும் விழா இது. அமைச்சர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்," என்றார்.
Comments