பாட்னா : நீண்ட காலம் பிரிந்து இருந்த லாலுவும், நிதீசும் தற்போதைய
சட்டசபை தேர்தலுக்காக கரம் கோர்த்து கொண்டனர். மோடி பிரதமர் வேட்பாளர் என்ற
அறிவிப்பு வந்ததுமே பா.ஜ., கூட்டணியில் இருந்து முதல் ஆளாக உறவை முறித்து
கொண்டவர் நிதீஷ்குமார். பீகாரில் லாலு ஆட்சியை அப்புறப்படுத்தியவர்
நிதீஷ்குமார்தான் என்றாலும், மோடி அலையில் பார்லி., தேர்தலில் ஏற்பட்ட
தோல்வியை தவிர்க்கவே இப்படி ஒரு கூட்டு வைக்க வேண்டிய கட்டாயம் லாலுவுக்கு
ஏற்பட்டுள்ளது.
லாலு, நிதீஷ் இருவரும் இடைத்தேர்தல் நடக்கும் ஹாஜ்பூர், சாப்ரா, முகைதீன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே மேடையில் இணைந்து ஓட்டு வேட்டை நடத்தினர். கூட்டம் திரளாக இருந்தது.
லாலு பிரசாத் பேசுகையில் , நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. பா.ஜ., ராமராஜ்யம் கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை முறியடிக்கவே நாங்கள் இணைந்து போராட துவங்கியிருக்கிறோம். நானும், நிதீஷசும் ஒரே வழியில் அரசியலுக்கு வந்தவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்த பின்னர் மேலும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய சேர்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல செய்தியை தரும். உ.பி.,யில் மாயாவதியும், முலாயம்சிங்கும் சேர வேண்டும். பா.ஜ.,வை தோற்படிப்பதே எங்களின் இலக்கு. இவ்வாறு கூறினார்.
நிதீஷ்குமார் பேசுகையில், இந்த நாட்டை காப்பாற்ற , எங்களுக்குள்ள வேறுபாடுகளையும், கருத்து வேற்றுமைகளையும் நாங்கள் மறக்க வேண்டும். தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். இவ்வாறு நிதீஷ் கூறினார்.
பீகாரில் 10 சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.,வை வெற்றி பெற விடக்கூடாது என்ற முழு எண்ணத்தில் லாலுவும் ( ராஷ்ட்டிரிய ஜனதாதளம் ) நிதீஷ்குமார் ( ஐக்கிய ஜனதாதளம் ), 20 ஆண்டுகளுக்கு பின்னர் கரம் கோர்த்துள்ளனர்.
கடந்த பார்லி., தேர்தலில் பா.ஜ.,வுக்கே கூடுதல் தொகுதி கிடைத்தது. இந்த அதிர்வலையே இருவரையும் இணைத்துள்ளது என பீகார் அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.
லாலு கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் அவரது செல்வாக்கு பீகாரில் சரிந்து இருந்தது. இந்நேரத்தில் இருவரும் ஓட்டு வங்கிக்காக இணைந்து தங்களை பலப்படுத்திக்கொண்டனர் என்பதே உண்மையாக இருக்க முடியும்.
Comments