முதல்வர் ஜெ.வை விமர்சித்து இலங்கை இணையத்தில் கட்டுரை: விஜயகாந்த் கடும் கண்டனம்!

முதல்வர் ஜெ.வை விமர்சித்து இலங்கை இணையத்தில் கட்டுரை: விஜயகாந்த் கடும் கண்டனம்!தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள இனவாத அரசான இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரீகமான முறையில் புகைப்படம் ஒன்று வெளியிட்டிருப்பதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இலங்கை கடற்படை அத்துமீறி தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்கிறது. இதுகுறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். அதை கொச்சைப்படுத்தும் வகையில் இது உள்ளது. மேலும் தமிழக முதல்வரை மட்டுமல்ல பிரதமரையும் இழிவுபடுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விசமத்தனமான தரம் தாழ்ந்து செயல்படும் விமர்சனங்களைக் கண்டு தமிழக மக்கள் கொந்தளித்துள்ளனர். எனவே இது போன்று எதிர்காலத்தில் இலங்கை செயல்படக் கூடாது என்று மத்திய அரசு அறிவுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசு, இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments