' அம்மான்னா சும்மா இல்லைடா '- பார்லி.,யில் தாங்க முடியல.,

புதுடில்லி: பார்லிமென்ட்டில், 'அம்மான்னா சும்மா இல்லைடா அவா இல்லைன்னா யாருமில்லைடா '-, என்று திரைப்பட பாடலை முதலில் பல்லவியாக எடுத்து வைத்து பின்னரே அ.தி.மு.க., எம்.பி.,யான நாகராஜன் ( கோவை தொகுதி ) தனது பிரச்னை குறித்து பேச ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் ஸ்பீக் ஒன்லி இன் இங்கிலீஷ் என்று கூறினார்.
ஆம் நான் ஆங்கிலத்தில் தான் பேசுகிறேன் என்ற உறுப்பினர், பின்னர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசுகையில் ஏர்இந்தியா, ஏர்லைன்ஸ் விமானங்களில் வரும் சரக்குகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையில் தெலுங்கானா என எம்.பி.,க்கள் சில நிமிடங்கள் ஐதராபாத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டதால் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. மதக்கலவர வன்முறை தடுப்பு மசோதா இன்று பார்லி.,யில் விவாததத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. இந்த விவாதத்தின் போது உ .பி., மாநில சமீபத்திய மோதல்கள் பாதிப்பு தொடர்பான விஷயமும் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என பார்லி., விவகார துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் உ .பி., மதமோதல்கள் தொடர்பாக காங்., துணை தலைவர் ராகுல் விவாதிக்க வேண்டும் என குரல் கொடுத்தார். அன்று சற்று ஆவேசப்பட்ட ராகுல் சபாநாயகர் இருக்கை வரை சென்று கோபாவேசத்துடன் பேசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மத மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் , உயிரிழந்த குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு, குற்றவாளிகள் மீதான நடவடிக்கை , ஆகியன தொடர்பான சட்ட வரைமுறைகள், மதகலவர வன்முறை தடுப்பு மசோதாவில் இடம் பெறும். இந்த மசோதா விவாதம் இன்று இருப்பதால் பார்லி.,யில் காரசாரத்திற்கு பஞ்சம் இருக்காது.

உலக வர்த்தக நிறுவன சிக்கல்: இதற்கிடையில் நமது நாட்டு வர்த்தக முறையில் உலக வர்த்தக நிறுவனத்துடன் எந்த முறையில் மத்திய அரசு செயல்பட போகிறது என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என காங்., இன்று நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால் இன்றைய வழக்கமான கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் காங்., கோரியுள்ளது.
ராஜ்யசபா ஒத்திவைப்பு : உலக வர்த்தக நிறுவனம் தொடர்பாக பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

தயாநிதி மீதான நடவடிக்கை என்ன ? : அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பித்துரை லோக்சபாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி செய்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக 365 பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெற்றுள்ளார். இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசாரணை எந்த அளவில் உள்ளது? அரசு இது வரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில், வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் நான் அனைத்து விவரங்களையும் கேட்டு பெற்று வருகிறேன். முழு விவரம் வந்ததும் நான் தெரிவிக்கிறேன் என்றார்.

Comments