சிக்கிம் எல்லை வரை சீனா ரயில் சேவை துவக்கம்

பீஜிங்: இந்தியா தனது 68-வது சுதந்திரதின விழாவை கொண்டாடி வரும் வேளையில் பக்கத்து நாடான சீனா சிக்கிம் மாநில எல்லை வரை ரயில் சேவையை துவக்கியுள்ளது.

இந்தியாவின் எல்லைப்பகுதியான சிக்கிம் மாநிலம் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள தனி நாடான திபெத்தை தன்னுடைய மாகாணத்தின் ஒரு பகுதியாக தன்னிச்சை யாக சீனாஅறிவித்து அதனை ஆக்ரமித்துள்ளது.
திபெத்தில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களை ரயி்ல்வே மூலம் இணைக்க முடிவு செய்துள்ள சீனா அதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்த நிலையில் சிக்கிம் மாநில எல்லையில் அமைந்துள்ள திபெத்தின் முக்கிய நகரங்களான லாஸா மற்றும் ஷிகாஸே ஆகிய நகரங்களுக்கு சீனா ரயில் பாதை அமைத்து அதில் ரயில் சேவையையும் துவக்கி உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் சுமார் 2.16 பில்லியன் டாலர் செலவில் பணிகளை துவக்கியது.தற்போது லாஸா முதல் நியீங்ஷி நகரையும் இணைக்கும் ரயில் பாதைக்கான பணியையும் துவக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்தியாவை சேர்ந்த அருணாசல பிரதேச மாநிலத்தை தன்னுடைய பகுதியாக அவ்வப்போது சீனா அறிவித்து வருகிறது . இந்த மாநிலத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நேபாளம் , பூடான், ஆகிய நாடுகளை வரும் 2020 ஆண்டிற்குள் ரயில் சேவை மூலம் இணைக்கும் வகையில் திட்டமிட்டு ரயில்பாதை அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு சீன ராணுவத்தினர் எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. அதுமட்டுமல்லாது இமாலய பிராந்திய பகுதிகளி்ல் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் சீனா முயற்சித்து வருகிறது என்பது குறிப்படத் தக்கது.

Comments