புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் புதிய தகவலை
முன்னாள் பாதுகாப்பு செயலர் ஆர். டி., பிரதான் திடுக் தகவலை
வெளியிட்டுள்ளார். ராஜிவ் புலிகளால் கொலை செய்யப்படும் போது அவரது நிலை
குறித்து ராஜிவ் வீட்டில் இருந்தபடியே ஒரு ஒற்றன் தகவல் அனுப்பி
வந்துள்ளான் என்றும், தமிழகத்தின் அப்போதைய கவர்னர் போதிய பாதுகாப்பு
வழிகள் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிரதான் சமீபத்தில் ராஜிவ் , சோனியாவுடன் எனது காலங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இதனை தெரிவித்துள்ளார். 311 பக்கங்கள் கொண்ட இதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது; ராஜிவ் உயிருக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என்பதை நான் அறிந்திருந்தேன். இது தொடர்பாக நான் ராஜிவ் தரப்பினருக்கும் தெரிவித்துள்ளேன். பாதுகாப்பு அலட்சியம் ராஜிவிடம் இருந்தது. சில நேரங்களில பாதுகாப்பு வாகனங்களை புறந்தள்ளுவார். வாகன சாவியை கூட பறித்து எறிந்தது உண்டு. ராஜிவ் கொலையில் சந்தேகத்திற்கிடமானவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் உண்மைகள் பல மறைக்கப்பட்டன.
டில்லி 10 ஜன்பத்தில் உள்ள ராஜிவ் வீட்டில் இருந்து புலிகளுக்கு தகவல் போய் இருக்கிறது. இவரது கொலையில் பல கட்டங்களில் உயர் மட்ட அளவிலான சதிகள் நடந்திருக்கிறது. திட்டமிட்ட சதிகள் பல வழியில் பின்னப்பட்டன. 1991ல் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிதான் நடந்தது. அப்போது கவர்னராக இருந்த பீஷ்ம நராயணன்சிங் நினைத்திருந்தால் அவர், கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து, நிச்சயம் ராஜிவை காப்பாற்றி இருக்க முடியும். இதனை கவர்னர் ஒழுங்காக செய்யவில்லை என்றேதான் தோன்றுகிறது.
டில்லி ஜன்பத்தில் ராஜிவின் நீண்டகால உதவியாளராக இருந்த வின்சென்ட் ஜார்ஜ் என்பவரிடம் இலங்கைவாசிகள் சிலர் தொடர்பில் இருந்ததும், அவருடன் அமர்ந்து பேசியதையும் நான் பார்த்திருக்கிறேன். ராஜிவ் தொடர்பான பாதுகாப்பு விஷயங்கள் கூட்டங்களில் எடுக்கும் முடிவுகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.
Comments