மதுரையில் பலமாகும் ஸ்டாலின் கோஷ்டி : கூடாரம் காலியாவதால் அழகிரி கலக்கம்

மதுரை சுற்றுப்பயணத்தின் போது, தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள், பொருளாளர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஆதரவு அளித்துள்ளதால், மதுரையில் அவர் கோஷ்டி பலமாகி உள்ளது. அதே நேரம், மதுரையில் ? நாட்களுக்கு முன், நடந்த தயா மஹால் ஆண்டு விழா மற்றும் ஆடிப் பெருவிழாவில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள், 23 பேரில், ஒன்பது பேர் மட்டும் கலந்து கொண்டனர். இதனால், அழகிரி கூடாரம் காலியாகிறது என, அழகிரி ஆதரவாளர்கள் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.


'சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில், மதுரையில் கடந்த 1ம் தேதி, கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஸ்டாலினை, அழகிரியின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன் வரவேற்றார். கூடவே, தன் செயல்பாடுகளுக்கு, வருத்தம் தெரிவித்து, கடிதம் அளித்தார். இதற்கிடையே, மிசா பாண்டியன் மீது கட்சியில் எடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும் என, கேட்டு, மாவட்ட பொறுப்பாளர் தளபதி, வேலுசாமி ஆகியோர் கட்சி தலைமைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, வரும் 7ம் தேதிக்குள், மிசா பாண்டியன் மீது எடுக்கப்பட்டிருக்கும், 'சஸ்பெண்ட்' நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்படும் என, ஸ்டாலின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், பாண்டியன் உற்சாகம் அடைந்திருக்கிறார். தன் மீதான, 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டதும், மிசா பாண்டியன் தலைமையில், அழகிரியின் ஆதரவாளர்கள், கருணாநிதியை நேரில் சந்திக்க உள்ளனர். இதேபோல, 'சஸ்பெண்ட்' செய்யப் பட்ட மேலூர் ஒன்றியச் செயலர் கொட்டாம்பட்டி ராஜேந்திரனும், ஸ்டா லினை நேரில் சந்தித்து, வருத்தம் தெரிவித்து, கடிதம் அளித்துள்ளார். அழகிரிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மிசா பாண்டியனும், கொட்டாம்பட்டி ராஜேந்திரனும், ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறியுள்ளதால், மதுரை மாவட்ட தி.மு.க.,வில், ஸ்டாலின், கை ஓங்கியுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, மதுரை தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது: அழகிரியின் மொத்த ஆதரவாளர்களையும் தன் பக்கம் கொண்டு வர, ஸ்டாலின் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தயா மஹாலின் ஆண்டு விழா மற்றும் ஆடி பெருவிழா அழகிரி ஆதரவாளர்களால், மதுரையில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்படும். அந்த வகையில், ? நாட்களுக்கு முன், தயா மஹாலின் ஆண்டு விழா நடந்தது. அதில், அழகிரியின் ஆதரவாளர்கள் ஒன்பது பேர் மட்டும் பங்கேற்றனர்.

இதற்கிடையில், அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மிசா பாண்டியன், கொட்டாம்பட்டி ராஜேந்திரன் ஆகியோர், ஸ்டாலின் பக்கம் சென்று விட்டதால், அழகிரியின் கூடாரம் காலியாகி வருகிறது. இதனால், அழகிரியும் ஆதரவாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.

Comments