பா.ஜ.,வின் வெற்றி 'ஒன் மேன் ஷோ' கிடையாது : மோகன் பகவத்

புவனேஸ்வர்: 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி 'ஒன் மேன் ஷோ' கிடையாது என்றும், சாமானிய மனிதன் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்பியதாலேயே பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளதற்கு காரணம் எனவும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய மோகன் பகவத் கூறியதாவது :
கட்சியின் செயல்பாட்டால் இந்த வெற்றி கிடைத்ததாக சிலரும், குறிப்பிட்ட சிலராலேயே பா.ஜ.,விற்கு இந்த வெற்றி கிடைத்ததாக சிலரும் கூறுகின்றனர்; ஆனால் உண்மையில், சாமானிய மனிதன் மாற்றத்தை விரும்பியதாலேயே பா.ஜ.,அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது என தெரிவித்துள்ளார். மோடி அலை காரணமாகவே பா.ஜ., வெற்றி பெற்றதாக கூறப்படுகிறதே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தனி ஒருவர் மட்டும் கட்சியின் வெற்றியை நிர்ணயிக்கவும், உறுதி செய்யவும் முடியாது என கூறி உள்ளார். 

மக்களின் திருப்தி முக்கியம்:

மேலும், நீங்கள் கூறும் அந்த தனிநபர்கள் இதற்கு முன்னரும் கட்சியில் இருந்துள்ளனர். அப்போது ஏன் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆகையால், மக்களின் மனமாற்றமே இதற்கு முழு காரணம். மக்கள் மகிழ்ச்சியாக வாழா விட்டாலும், திருப்தி கொள்ளாவிட்டாலும் இந்த அரசும் அடுத்த தேர்தலில் தூக்கி எறியப்படும். அரசியல் மாற்றங்கள் நிகழ்வது மக்களால் மட்டுமே. இனி வரும் காலங்களிலும் அத்தகைய மாற்றங்கள் மக்களாலேயே ஏற்படும். முன்பெல்லாம் மக்களை எப்படி ஆட்சி செலுத்துவது என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர். தற்போது அவர்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்கின்றனர் என மோகன் பகவத் கூறி உள்ளார்.கட்டாக்கில் ஓடியா விக்லி என்ற பத்திரிக்கையின் பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், இங்கிலாந்தில் வாழ்பவர்களை ஆங்கிலேயர்கள் என்றும், ஜெர்மனில் வாழ்பவர்களை ஜெர்மானியர்கள் என்றும், அமெரிக்காவில் வாழ்பவர்களை அமெரிக்கர்கள் என்றும் அழைக்கும் போது இந்துஸ்தானில் வாழ்பவர்களை ஏன் இந்துக்கள் என்று அழைப்பதில்லை? கலாச்சார அடிப்படையில் இந்துத்துவா என்ற பெயராலேயே இந்தியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்துத்துவா என்பது வாழ்க்கை முறை.

யார் இந்துக்கள்:

அதே போன்று இந்துக்கள் என கூறப்படுபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்த கடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக கூட இருக்கலாம். விவேகானந்தர் கூறியதை போன்று கடவுளை வழிபடாதவன் நாத்திகவாதி அல்ல; சுய நம்பிக்கை இல்லாதவனே உண்மையான நாத்திகவாதி. ஆதிகாலம் முதல் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களை ஒருங்கிணைத்திருப்பது இந்துத்துவா மட்டும் தான் என உலகம் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சிலர் மட்டும் அதனை புரிந்து கொள்ளாமலும், தவறாக புரிந்து கொண்டும் மத பேதங்களை ஏற்படுத்துகின்றனர்.உலகில் தற்போது எங்கு பார்த்தாலும் இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருளில் இருந்து விடுபடுவதற்கான தீர்வும் ஆறுதலும் இந்தியாவில் தான் உள்ளது என உலகம் உணர்ந்து கொள்ள துவங்கி உள்ளது. ஏனெனில் இன்று வரை இந்தியா வாழ்க்கை நெறிகளின் அடிப்படையிலும். கலாச்சார அடிப்படையிலும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது; அந்த வாழ்க்கை தர்மத்தை அனைவரும் புரிந்து கொண்டால் உலகம் தொடர்ந்து இந்தியாவை மதிக்கும்; ஆனால் அந்த தர்மம் இந்த நாட்டை விட்டு சென்று விட்டால் இந்த நாடு பிளவுபட்டு அழிவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு மோகன் பகவத் எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Comments