பா.ஜ., எங்கள் திட்டங்களை திருடுகிறது; புதியவை இல்லை என சோனியா புகார்

புதுடில்லி: நாட்டிற்கு நல்ல திட்டங்களை வழங்க பா.ஜ.,விடம் சொந்த சரக்கு இல்லை. அதனால், எங்கள் ஆட்சியின் போது தீட்டப்பட்ட திட்டங்களை தற்போது ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என, காங்கிரஸ் தலைவர் சோனியா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் மத்தியில் இன்று சோனியா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த முறை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு லோக்சபாவில் நாம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறோம். இருப்பினும், நாம் முன்னைக் காட்டிலும் வேகமாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை சிலர் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்த முயல்கின்றனர். இந்நிலையில் நாம் ஜனநாயகத்தை காப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் எதுவும் புதியவை அல்ல. அந்த திட்டங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்து திருடப்பட்டவை தான். இருப்பினும் அதை நாம் வரவேற்கிறோம். இருப்பினும், பா.ஜ.,வினர் எந்த கொள்கையும் இல்லாமல் நம்மை எதிர்க்கின்றனர். இவ்வாறு சோனியா பேசினார்.

கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசை மக்கள் மிக மோசமாக தூக்கி எறிந்துவிட்டனர். இதனால் அப்செட் அடைந்துள்ள சோனியா, தனது எம்,பி.,க்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். இதனால் தான், முன் எப்போதும் இல்லாத வகையில், காங்கிரஸ் எம்,பி.,க்கள் மத்தியில் சோனியா உணர்ச்சிகரமாக பேசினார் என்று கூறப்படுகிறது.

எதிர் வரும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால், பார்லிமென்ட்டில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புவதாகவும், அதற்காகவே, எம்,பி.,க்களை முடுக்கிவிடும் வகையில் சோனியாவின் பேச்சு அமைந்துள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதன் எதிரொலியாவே, கடந்த சில நாட்களாக ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் எம்,பி.,க்கள் லோக்சபாவில் விதிமுறைகளையும், அவை சம்பிரதாயங்களையும் மீறி, கடும் கூச்சல், குழப்படிகளை உருவாக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments