ரயிலில் தவறி விழுந்தகுழந்தைக்கு மாற்று தோல் பொருத்தும் சிகிச்சை

சென்னை : மாம்பலம் ரயில் நிலையத்தில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறிவிழுந்த குழந்தைக்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் மாற்றுத் தோல் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தாம்பரம் அடுத்த சோமங்கலத்தை சேர்ந்த, தேவா கார்த்திகா தம்பதியரின் மகள் காவியா, 3. கடந்த 26ம் தேதி, தி.நகர் வந்த தேவா குடும்பத்தினர், ஆடை உள்ளிட்டவைகளை வாங்கி முடித்து, ரயிலில், தாம்பரம் செல்ல மாம்பலம் ரயில் நிலையம் வந்தனர்.


மாலை 4:30 மணியளவில், தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் கார்த்திகா, குழந்தை காவியாவுடன் ஏறினார். ஆனால் மற்ற எவரும் ரயிலில் ஏறாததால், ரயிலில் ஏறிய கார்த்திகா குழந்தை காவியாவுடன் இறங்க முயற்சித்தார். அப்போது, ரயில் புறப்பட, எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே காவியா தவறவிடப்பட்டார். சில அடி தூரம் சென்ற ரயில் உடனே நிறுத்தப்பட்டு, இரண்டு கைகளிலும் பலத்த காயங்களுடன் காவியா மீட்கப்பட்டார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவியாவுக்கு, வலது கையில், விரல்கள் பாதியாக துண்டிக்கப்பட்டு இருந்தன. இடது கையில் உள்ளங்கை வரை விரல்கள் சிதிலமடைந்து இருந்தன. இதனால், குழந்தைக்கு, மாற்றுத்தோல் பொருத்தப்பட உள்ளது.

Comments