ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திய அரசு
வாகனத்திற்கு (பொலிரோ) பூட்டு போடப்பட்டது. ராமநாதபுரம் நகரில் ஜூன் 29ல்,
ஒருவழி பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மதுரையிலிருந்து
வரும் அரசு பஸ்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் வண்டிக்காரத்தெரு வழியாக புது
பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
குறுகலான இப்பகுதியின் ரோடு ஓரம் வாகனங்களை
நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலக
வாகனம் ( டி.என்- 65 ஜி 0547), ரோட்டோரம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு
வந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இது
குறித்து அரசு வாகன டிரைவரிடம் போக்குவரத்து போலீசார் பல முறை
எச்சரித்தனர். ஆனாலும், அவர் போலீசாரின் அறிவுரையை ஏற்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை 10:30 மணிக்கு, மீண்டும் அதே இடத்தில் கூட்டுறவு
பதிவாளர் அலுவலக வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து போலீஸ்
இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், வாகனத்தின் முன்புற சக்கரத்தில் பூட்டு
போட்டார். இது குறித்து அரசு வாகன டிரைவர் திராவிடச் செல்வன் கூறுகையில்,"
பரமக்குடியில் இருந்து பணிக்கு வரும் துணை பதிவாளரை ஏற்றிச் செல்ல, அலுவலக
முன்புற ரோடு ஓரம் நிறுத்திய வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் பூட்டு
போட்டு சென்றனர்” என்றார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், "
சாலை விதிகளை கடைபிடிக்காததால், அரசு வாகனத்திற்கு பூட்டு போடும் நிலை
ஏற்பட்டது. 'இனிமேல் இது போன்று நிறுத்தமாட்டேன்,' என, டிரைவர்
உறுதியளித்ததால், பிறகு பூட்டு அகற்றப்பட்டது,” என்றார்.
Comments