ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லையில் உள்ள இந்திய நிலைகள்
மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானுடன் நல்லுறவு வேண்டும் என்று கருதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு
தெரிவிக்கவே, பாக்., அரசையும் மீறி பாக் ராணுவம் இந்த அத்துமீறல்களை
நடத்தி வருவதாக கருதப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும்
வெற்றி பெற்றது.
நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவி
ஏற்பு விழாவிற்கு அண்டை நாட்டு தலைவர்களை பங்கேற்க வருமாறு அழைப்பு
விடுத்தார். குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு சிறப்பு
அழைப்பு விடுக்கப்பட்டது. ராணுவத்தின் கெடுபிடிகளையும் மீறி, ஷெரீப் பதவி
ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். ஆனால், அன்றைய தினம், ஆப்கானிஸ்தானில்
உள்ள இந்திய தூதரக கட்டடத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் பின்னணியில், ஐ.எஸ்.ஐ., இருந்ததாக கூறப்பட்டது. இதன் மூலம், மோடி
மீதான முதல் எதிர்ப்பை பாக்., ராணுவம் மறைமுகமாக பதிவு செய்தது.
தொடர் அத்துமீறல்:
மோடி அண்டை நாடுகளான பூடான் சென்றபோதும், நேபாளம் சென்றபோதும் எல்லையில்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். துருப்புக்கள் இந்திய நிலைகள் மீது
துப்பாக்கி சூடு நடத்தி, தங்கள் எதிர்ப்பை காட்டின. இந்நிலையில், கடந்த சில
தினங்களாக இந்திய நிலைகள் மீது பாக்., ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு
நடத்தி வருகிறது. இதன் பின்னணியிலும் மோடி எதிர்ப்பு உள்ளதாக
கூறப்படுகிறது.இந்தியா, பாகிஸ்தான் இடையில் நடந்த போர்களில் கார்கில் போர்
முக்கியமானது. இந்த போரில், இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான்
படைகளை, இந்திய ராணுவம் ஓட ஓட விரட்டியடித்தது. இதனால், கார்கில் போர்
வரலாற்றில் இடம் பெற்றது. இப்போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்காக
கார்கிலில் போர் நினைவு சி்ன்னம் அமைக்கப்பட்டது. கார்கில் போர் நடந்த
1999ம் ஆண்டில் இருந்து எந்த பிரதமரும் அங்கு செல்லவில்லை. இந்நிலையில்,
பிரதமர் நரேந்திரமோடி நேற்று கார்கில் சென்று, வீரர்கள் மத்தியில்
பேசினார். உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்திய வீரர்கள் காயம்:
பிரதமர் கார்கில் செல்கிறார் என்ற தகவல் வௌியானதும் பாகிஸ்தான் ராணுவம்
தனது சேட்டையை ஆரம்பித்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கதுவா,
சாம்பா, ஜம்மு, ரஜூரி, பூன்ச் ஆகிய மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லை
பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். கடந்த 11ம்
தேதி பாக்., படையினர் நடத்திய தாக்குதலில் 7 எல்லை பாதுகாப்பு படை
வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 20 முறை
பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 5 முறை அத்துமீறி நடந்துள்ளது. இந்திய படைகளும்,
பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன.
மோடி விமர்சனம்:
பாக்., ராணுவம் இம்முறை சிறு பீரங்கி, தானியங்கி ஆயுத இயந்திரங்கள்,
கையெறி குண்டுகள் ஆகியவற்றை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியது.
இந்நிலையில், தனது கார்கில் பயணத்தின் போது வீரர்கள் மத்தியில் பேசிய
பிரதமர் நரேந்திரமோடி, இந்தியா மீது நேரடியாக போர் தொடுக்க பலமில்லாத
பாகிஸ்தான் அரசு, மறைமுக போர் தொடுத்து வருகிறது,' என்றார். சமீபத்தில்
பாகிஸ்தான் சென்ற இந்திய வௌியுறவுத்துறை செயலர் சுஜாதாசிங், 'எல்லையில்
பாக்., ராணுவம் நடத்தும் துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும். குண்டு
சத்தம் நின்றால் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு குறித்த பேச்சுவார்த்தையை
துவங்க முடியும்,' என்று கண்டிப்பாக கூறி உள்ளார். இந்நிலையில், எல்லையில்
தொடர்ந்து வாலாட்டி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும்
வகையில், எல்லையோரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி
உள்ளது. எல்லை நெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டு,
உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காரணம் என்ன?:
பாகிஸ்தானில்
தற்போது ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆட்சி நடந்து வருகிறது.
நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாக்., அரசு, அமெரிக்க வழிகாட்டுதலின்படி,
இந்தியாவுடன் நல்லுறவு கொள்ள விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதிகளின்
பின்னணியில் செயல்படும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யும், ராணுவமும் இதை
விரும்பவில்லை. எனவே தான், அவை ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளின் போதும்
எல்லையில் துப்பாக்கி சூட்டை நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றன.
பாகிஸ்தானுடன் நல்லுறவு விரும்பும் பிரதமர் மோடிக்கு தங்கள் எதிர்ப்பை இதன்
மூலம் அவை பதிவு செய்கின்றன என்று கூறப்படுகிறது.
Comments