ஆட்சி, அதிகாரத்தை கைவிடத் தயக்கம்: வாரிசு அரசியலில் சோனியா,மேனகா

புதுடில்லி: தங்கள் வாரிசுகள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா, மேனகா ஆகிய இருவரும் ஒரே கருத்தை கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில், இருவரும் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்தி, அரசியல் நடத்தி வருகின்றனர். ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, காங்கிரஸ் கட்சிக்குள் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்ற பெருமையுடன், சுதந்திர இந்தியாவின் முதல் ஆட்சி, அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு முதல் பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து நேரு குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, ராஜிவ் ஆகியோர் பிரதமர் பதவியை அலங்கரித்தனர். சில தவிர்க்க முடியாத காரணங்களால், நேரு குடும்பம் அல்லாத சிலர் அப்பதவியில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. 15வது லோக்சபாவிற்கான தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது சோனியா பிரதமராக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், உள்நாட்டு விதிமுறைகள் அதற்கு ஒத்துவராத காரணத்தினால் மன்மோகன்சிங்கே மீண்டும் பிரதமர் ஆனார். இருப்பினும், சோனியா, ராகுல் ஆகியோரின் கண்காணிப்பிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்டது.

காங்., தோல்வி:

கடந்த 16வது லோக்சபா தேர்தலிலும் ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது. தேர்தலில் வெற்றி பெற்றால் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது சோனியாவின் ஆசை. அதை அறிந்த சில காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் பிரதமர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளன என்று கூறி தலைமையின் விருப்பத்திற்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு படுதோல்வியை தழுவியது. தோல்விக்கு ராகுலே காரணம் என சில குரல்கள் அங்கும் இங்குமாக கட்சிக்குள் கேட்க துவங்கின. உடனே, தோல்விக்கு ராகுலை பலியாடாக ஆக்க கூடாது என சோனியா கட்டளையிட்டார். இதைத் தொடர்ந்து, தோல்விக்கு ராகுல் காரணமல்ல என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சரியாக எடுத்து செல்லாததே காரணம் என்றும், சோனியாவிற்கு நெருக்கமான தலைவர்கள் அறிக்கை விட்டனர். இதன் மூலம் ராகுலை சோனியா பத்திரப்படுத்திக் கொண்டார்.
கடும் எதிர்ப்பு:

காங்கிரஸ் கட்சிக்குள் சோனியா, ராகுலுக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜக்மீத்சிங், காங்கிரஸ் புத்துயிர் பெற வேண்டும் என்றால், சோனியாவும், ராகுலும் கட்சியை விட்டு விலகி, ஓய்வெடுக்க வேண்டும் என்றார். இந்த அறிக்கை, காங்கிரஸ் தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தூண்களில் ஒருவர் என்று புகழப்பட்ட திக்விஜய்சிங், 'ராகுல் கட்சியை நடத்த தகுதியுள்ளவராக இருக்கலாம். ஆனால், அவர் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் அல்ல,' என்ற தொனியில் கருத்து தெரிவி்த்திருந்தார். இதற்கு ஏ.கே,அந்தோணி உள்ளிட்ட சோனியா விசுவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, சிங் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது.

பிரியங்காவிற்கு வரவேற்பு:

ராகுல், சோனியாவுக்கு எதிரான தனது கடுமையான எதிர்ப்பை, மூத்த காங்கிரஸ் தலைவரான ஜனார்த்தன் திரிவேதி மறைமுகமாக பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் தனிப்பட யாரையும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், மற்றவர்கள் சொல்வதை கேட்க வேண்டியது தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவசியம் தேவை. நாம் சொல்வதையே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற மனப்பான்மை இருக்க கூடாது,' என்று தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து எதிர்ப்பு குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், சோனியா தனது வாரிசை அரசியலில் இருந்து விலக்கவோ, ஒதுக்கி வைக்கவோ விரும்பவில்லை. மாறாக, ராகுலுக்கு பதில் பிரியங்காவை அரசியலில் இறக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிட்டார். தனது சகோதரர் போட்டியிடும் அந்த தொகுதியில் மட்டும் பிரியங்கா பிரசாரம் செய்தார். மோடி குறித்த கடுமையான விமர்சனங்களால் மீடியாக்களில் பரபரப்பாக பிரியங்கா வலம் வந்தார். அமேதியில் ராகுல் வெற்றி பெற்றார். ஆனால், நாடு முழுவதும் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. மக்களையும், மீடியாக்களையும் கவருவதில் பிரியங்காவிற்கு உள்ள திறமை, பொலிவு ராகுலுக்கு இல்லை என்று நினைத்த காங்கிரஸ் மேலிடம், அடுத்த கட்டமாக பிரியங்காவை அரசியலில் களம் இறக்கி, மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. கட்சிக்கு விசுவாசமான சில தலைவர்கள் இதற்கு ஏதுவாக அறிக்கைகளை விட துவங்கி உள்ளனர்.

இது மேனகாவின் திட்டம்:

சோனியா விவகாரம் இப்படி இருக்க, இதே ஸ்டைலில் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், இந்திராவின் இரண்டாவது மருமகளுமான மேனகா செயல்பட துவங்கிவிட்டார். இவர், எப்படியாவது தனது மகன் வருணை உத்தரபிரதேசத்தின் முதல்வராக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதற்கு அச்சாரமாக அவர் வௌியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'உ.பி., மாநிலம், நாட்டின் பெரிய மாநிலம். ஆனால், இங்கு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. தினமும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன. உ.பி.,யில் பா.ஜ., வெற்றி:உ.பி.,யில் உள்ள பெரும்பாலான லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. மத்தியிலும் பா.ஜ., அரசு உள்ளது. எனவே, பா.ஜ.,வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், மாநிலத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ளாமல், சமாஜ்வாதி அரசு முடக்கியுள்ளது.உ.பி.,யில், பா.ஜ., அரசு அமைந்தால், அதுவும், என் மகன் வருண், உ.பி., மாநிலத்தின் முதல்வரானால், இந்த மாநிலத்தை சீரமைத்து, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவார் என, நினைக்கிறேன்,' என்று கூறி, தனது வாரிசு அரசியல் எண்ணத்தை வௌிப்படுத்தி உள்ளார். மொத்தத்தில் கட்சியும், ஆட்சி அதிகாரமும் தங்கள் குடும்பத்தின் வசமே இருக்க வேண்டும் என்று சோனியாவும், மேனகாவும் விரும்புகின்றனர் என்பது அவர்களின் செயல்பாடுகள் மூலம் தௌிவாக தெரிய வந்துள்ளது.

Comments