மூன்றாவது சுற்றில் ஷரபோவா: யு.எஸ்., ஓபனில் அசத்தல்

Sharapova, tennis, russiaநியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, ருமேனியாவின் அலெக்சாண்டிரா டல்ஹெரு மோதினர். அபாரமாக ஆடிய ஷரபோவா 4–6, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில், சுவிட்சர்லாந்தின் டிமியா பாக்சின்ஸ்கியை தோற்கடித்தார். டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6–3, 6–4 என பெலாரசின் அலெக்சாண்டிரா சாஸ்னோவிச்சை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மற்ற போட்டிகளில், ருமேனியாவின் சிமோனா ஹலேப், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், ஜெர்மனியின் கெர்பர், ஆன்டிரியா பெட்கோவிச், சபைன் லிசிக்கி, பிரான்சின் அலைய்ஸ் கார்னட், இத்தாலியின் சாரா இரானி, ராபர்டா வின்சி, செக்குடியரசின் லுாசி சபரோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

வாவ்ரின்கா கோபம்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, 6–3, 6–4, 3–6, 7–6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தாமஸ் பெல்லுச்சியை வீழ்த்தினார். நான்காவது செட்டின் போது, சத்தமிட்டு தொந்தரவு கொடுத்த ரசிகர் ஒருவரை நோக்கி, வாயை மூடவும் என வாவ்ரின்கா ஆத்திரமாக கூறினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின், இயல்பு நிலைக்கு மாறிய வாவ்ரின்கா, போட்டியில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றார்.

முதல் சுற்றுப் போட்டிகளில், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், குரோஷியாவின் மரின் சிலிக், பல்கேரியாவின் டிமிட்ரோவ், ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ஜப்பானின் டாட்சுமா இடோ உள்ளிட்டோர் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பயஸ் ஜோடி வெற்றி

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக் ஜோடி, 7–6, 6–2 என்ற நேர் செட் கணக்கில், இத்தாலியின் போலெல்லி, போக்னினி ஜோடியை வீழ்த்தியது.

சானியா ஜோடி அபாரம்:

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா, பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி 6–2, 3–6, 10–5 என்ற கணக்கில், அமெரிக்காவின் டொர்னாடோ அலிசியா பிளாக், எர்னஸ்டோ எஸ்கோபெடோ ஜோடியை வீழ்த்தியது.

Comments