உலக பாட்மின்டன்:அரையிறுதியில் சிந்து

sindhu, badmintom, indiaகோபன்ஹேகன்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் அரங்கில், தனது 2வது பதக்கத்தை உறுதி செய்தார். மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 
டென்மார்க்கில் உள்ள  கோபன்ஹேகன் நகரில், 21வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் ‘நம்பர்–12’ வீராங்கனையான இந்தியாவின் சிந்து, இரண்டாவது இடத்திலுள்ள சீனாவின் ஷிஜியான் வாங்கை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 19–21 என பறிகொடுத்தார். பின் எழுச்சி கண்ட இவர், இரண்டாவது செட்டை 21–19 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய சிந்து,  21–15 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி 25 நிமிடம் நடந்த காலிறுதியின் முடிவில், இந்தியாவின் சிந்து 19–21, 21–19, 21–15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதன் மூலம், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். கடந்த முறையும் வெண்கலம் வென்ற இவர், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில், இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனை படைக்க உள்ளார். இதுவரை இந்தியாவின் பிரகாஷ் படுகோன் (1983, வெண்கலம்), ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி (2011, வெண்கலம்) தலா ஒரு முறை பதக்கம் வென்றனர்.

செய்னா தோல்வி:

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–7’ வீராங்கனையான இந்தியாவின் செய்னா நேவல், ‘நம்பர்–1’ சீனாவின் லி செயுரியிடம் 15–21, 15–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இது, லி செயுரிக்கு எதிராக செய்னாவின் 8வது தோல்வி.

ஸ்ரீகாந்த் ஏமாற்றம்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் லாங் சென் மோதினர். துவக்கம் முதலே சொதப்பிய ஸ்ரீகாந்த 12–21, 10–21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.

Comments