ஐ.என்.எஸ்.,கோல்கட்டா போர்க்கப்பல் ; நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிப்பு

மும்பை: இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாட்டின் மிக பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., கோல்கட்டா இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி இதன் செயல்பாட்டை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மும்பை கடற்படை தளத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி மகாராஷ்ட்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான், கடற்படை தளபதி தோவன் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.
இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் பணிகள் துவங்கி பல ஆண்டுகள் பின்னர் இந்த போர்க்கப்பல் இறுதி வடிவம் பெற்றது. ஐ.என்.எஸ்., சென்னை, ஐ.என்.எஸ்.,கொச்சி என்ற போர்க்கப்பலும் உருவாகும் பணியில் இருந்து வருகிறது.


தயார் நிலையில் :

கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே., தோவன் பேசுகையில் , நமது கடற்படை பல்வேறு யுக்திகளுடன் சக்தி கொண்டது. ஐ.என்.எஸ்.,கோல்கட்டா கப்பல் நமது படைக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் சக்தி கொண்டது. நமது படை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமாக தயார் நிலையில் இருக்கிறது.

பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், இந்திய கடற்படையில் இது வரலாற்றில் முக்கியமான நாள், மாபெரும் போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருப்பது நமக்கு மிகப் பெருமை தரும் விஷயம். இன்னும் பல்வேறு தளவாடங்களை தயாரிக்க மத்திய அரசு முனைப்புடன் உதவி செய்யும். இவ்வாறு ஜெட்லி பேசினார்.

வர்த்தகம் முன்னேற்றம்:

பிரதமர் மோடி பேசுகையில், ஐ.என்.எஸ்.,கோல்கட்டா மிகப்பெரிய போர்க்கப்பல் ஆகும். நமது ராணுவம் நமது நாட்டின் சுதந்திரத்தை காக்கும், ஐ.என்.எஸ்.,கோல்கட்டா தயாரிப்பு நமது நாட்டின் தொழில்நுட்ப சக்திக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த போர்க்கப்பல் தயாரிப்பில் ஈடுபட்ட வல்லுனர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். நாம் போரிடுவதற்காக எதையும் உருவாக்கினோமா என்பதை தவிர நாம் அலர்ட்டாக இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு மாதிரி. கடலோர பாதுகாப்பு பேணிகாப்பதன் மூலம் வர்த்தகம் முன்னேற்றம் பெறுகிறது.

எனது தலைமையிலான அரசு பாதுகாப்பு துறை செலவினத்திற்கு முக்கியத்தும் அளிக்கிறது. பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீனம்ஆகும் போது நமது படையினர் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு முடிவு கட்டி, அவற்றை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments