' மீண்டு எழுகிறது பொருளாதாரம்'- ரிப்போர்ட் கார்டு கொடுத்தார் ஜெட்லி


புதுடில்லி: மோடி பிரதமராக பொறுப்பேற்ற 100 நாட்களில் இந்திய பொருளாதாரம் மீண்டு எழுந்து முன்னேற்ற பாதை நோக்கி செல்கிறது என்றும், மேலும் நல்ல நிலையை எட்ட இன்னும் உழைக்க வேண்டியது இருக்கிறது என்றும் மத்திய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி தனது ரிப்போர்ட் கார்டை வெளியிட்டு தெரிவித்தார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய ஜெட்லி மேலும் கூறுகையில்,
சமீபத்திய தேர்தல் முடிவுகள் வலுவான நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமைந்தது. நாங்கள் பொறுப்பேற்ற காலத்தில் பெரும் சவால்கள் கையாள வேண்டியதாக இருந்தது. கடந்த 100 நாட்களில் தொலைநோக்கு வளர்ச்சிக்கான திட்டம் வகுத்துள்ளோம். பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு வலுவான பிரதமர் மோடி நல் ஆதரவு அளித்து வருகிறார். முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5. 7 சதவீதத்தை எட்டியுள்ளது திருப்தி அளிக்கிறது. இன்னும் இரண்டு வருடத்தில் பொருளாாதாரம் நல்ல நிலையை எட்டும். பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் அச்சம் நீங்கி முதலீட்டுக்கு முன்வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் மேலான அன்னிய முதலீட்டை எதிர்பார்க்கலாம். பொருளாதார வளர்ச்சியே இந்த அரசின் முதல் நோக்கமாக செயல்பட்டு வருகிறோம். உற்பத்தி துறை நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. வெங்காயம் விலை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் துவங்கிய அனைவருக்கும் வங்கி கணக்கு ஜன்தன் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு விட்டன. இன்ஸ்சூரன்ஸ் மசோதா தொடர்பான பணியை செலக்ஷன் கமிட்டி துவக்கியிருக்கிறது. இன்ஸ்சூரன்ஸ் மசோதா திருத்தம் வரும் பார்லி., கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். குறைவான மழை வளர்ச்சியை பாதித்து வருகிறது. இருப்பினும் உணவு தானியம் போதிய கையிருப்பு உள்ளது. இது குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை பெருக்குவதில் பல்வேறு முனைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த கால வரிமுறைகள் என்பதற்கு இந்த அரசில் இடமில்லை. என்றார். பங்கு விலக்கல் துறையில் போதிய நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளோம்.
இந்திய படை தயார் நிலையில்: எல்லையில் பாகிஸ்தான் அத்து மீறல் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில், இது குறித்து நாங்கள் முழுக்கவனத்துடன் இருக்கிறோம். எதனையும் சமாளிக்கும் வகையில் இந்திய படை தயார் நிலையில் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

Comments