மின்சாரத்தை சேமிக்க ஒரு வாய்ப்பு ; எல்.இ.டி., விளக்குகள் தான் எரியும்

புதுடில்லி: அரசு அலுவலகங்களில் இனி சாதாரண விளக்குகளுக்கு பதிலாக மின்சார சிக்கனத்தை தரக்கூடிய எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 15 சதவீதம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, மக்களுக்கான கொள்கைகளில் மட்டுமல்லாமல், அரசுத்துறைகளிலும் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் பகுதியிலுள்ள அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது அலுவலகங்கள் குப்பைக் கூளங்களாகவும், எச்சில் கறையுடனும் இருப்பதையறிந்த அவர், அலுவலகங்களை உடனடியாக சுத்தப்படுத்தும்படி உத்தரவிட்டார். உடனடியாக தேவையற்ற பைல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அலுவலகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு பளீச்சென மாறின. அரசு அலுவலகங்களில் பேப்பர் உபயோகத்தைக் குறைத்து கம்ப்யூட்டர் பயன்பாட்டை அதிகரிக்கவும் பிரதமர் உத்தரவிட்டார். தற்போது டில்லியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தனியார் துறை அலுவலகங்களுக்கு இணையாக மாற்றம் அடைந்துள்ளன.

இந்நிலையில், இதன் அடுத்த முயற்சியாக, அரசு அலுவலகங்களில் மின்சார சிக்கனத்தை ஊக்குவிப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள விளக்குகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி., விளக்குகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய மின்துறை செயலாளர் சின்கா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தங்களது அமைச்சகங்கள், அதற்கு உட்பட்ட துறை அலுவலகங்கள், துணை அலுவலகங்களில் சாதாரண விளக்குகள் மற்றும் சி.எப்.எல்., விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி., விளக்குகளையே பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்களில் எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் வரும் 2020ம் ஆண்டுவாக்கில் 45 முதல் 65 டெராவாட் (1 டெரா வாட் = 114 மெகாவாட்) அளவுக்கு மின்சாரத்தை சேமிக்க இயலும் என திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வகை விளக்குகளை பயன்படுத்தினால், தற்போதைய மின் உற்பத்தியில் 34,723 மெகாவாட் அளவிற்கு மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மொத்த மின் உற்பத்தியில் 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments