ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார் மோடி

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம், 27ம் தேதி, ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கூட்டத்தில், மோடி, முதல் முறையாக உரையாற்றவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம்:நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், முதல் வெளிநாட்டு பயணமாக, பூடான் சென்றார். அதற்கு பின், பிரேசிலில் நடந்த, 'பிரிக்ஸ்' அமைப்பின் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதன்பின், ஐ.நா., பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதாகவும், அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசவுள்ளதாகவும், தகவல் வெளியானது. ஆனாலும், ஐ.நா., பொதுக்குழுவில், மோடி உரையாற்றுவது தொடர்பாக, எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.இந்நிலையில், ஐ.நா., பொதுக் குழு கூட்டம், அடுத்த மாதம், 24ல் துவங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கவுள்ளதாக, அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், எந்தெந்த நாடுகளின் தலைவர்கள், எந்தெந்த தேதியில் பேசவுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இதன்படி, 'இந்திய நிர்வாகத்தின் தலைவர், செப்., 27ல், உரையாற்றுவார்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி:இதையடுத்து, ஐ.நா., பொதுக்குழுவில், பிரதமர் மோடி, செப்., 27ல், உரையாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதே நாளில் தான், வங்கதேசம், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பேசவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, 24ம் தேதி பேசவுள்ளார். 200க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், மோடி, முதல்முறையாக பேசவுள்ளதால், அவரின் பேச்சுக்கு, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த கூட்டத்துக்கு பின், வாஷிங்டன் செல்லவுள்ள மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

Comments