கடந்த சில ஆண்டுகளாக, போதிய மழையின்மையால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
முன்பேர வர்த்தகம் :
கோவை
மளிகை வியாபாரிகள் சங்க உதவிச்செயலாளர் கணேசன் கூறுகையில், ''நாட்டின் ஏதோ
ஒரு பகுதியில் இருந்து கொண்டு மற்றொரு பகுதியில் மக்கள் அன்றாடம்
பயன்படுத்தும் மளிகை பொருட்களை, 'ஆன்லைனில்' முன்பேர வர்த்தகம்
செய்கின்றனர். இதுபோன்ற வர்த்தகத்தில் ஈடுபடுபவருக்கு பொருளின் தன்மை,
தரம் பற்றி தெரியவாய்ப்பில்லை. பொருளின் மதிப்பில் பத்து சதவீதத்துக்கான
தொகையை செலுத்தி, வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். பணத்துக்காக அத்தியாவசிய
பொருளை விற்பனை செய்யாமல், நீண்டநாள் இருப்பு வைக்கின்றனர். இதனால் செயற்கை
தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொருட்கள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை
ஏற்படுகிறது. விலையும் பல மடங்கு உயர்கிறது. இதனால் ஆன்லைன் வர்த்தகத்தை
தடை செய்ய வேண்டும்,'' என்றார்.
பதுக்கல் காரணம்:
குறிப்பிட்ட
பொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் நிலையில், அந்த பொருளை
அதிகளவில் பதுக்கி வைத்து, பின்னாளில் விலை உயரும்போது, விற்பதுதான்
பதுக்கல். இதனால், பொருளின் விலை தாறுமாறாக உயர்ந்து, சில வியாபாரிகளின்
பையில் பணம் கொட்டும். இதுபோன்ற பதுக்கல்கள் அடிக்கடி வடமாநிலங்களில்
நடப்பதும், வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி, பொருட்களை சந்தைக்கு
விடுவிப்பதும் உண்டு.
உதவாத கோட்டா முறை:
'சிறு, நடுத்தர, மொத்த வியாபாரிகள், மளிகைப்பொருட்களை குறிப்பிட்ட
அளவுகளில் இருப்பு வைக்க வேண்டும்' என்ற நடைமுறை உள்ளது. இது 1800ம்
ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறை. இதையே தற்போதும் வருவாய், புள்ளியியல்
மற்றும் வழங்கல் துறையினர் பின்பற்றுகின்றனர். இவ்விதிமுறைகள் நடைமுறைக்கு
வந்தபோது மக்கள் தொகையும், நுகர்வும் குறைவு. தற்போது, அதிகம்.இதனால்,
வியாபாரிகளால் தேவையான அளவில் பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது இருந்த 'கோட்டா' முறையில் பொருட்களை
இருப்பு வைத்தால், தற்போதுள்ள மக்கள் தொகைக்கு சரியாக இருக்குமா என்ற
கேள்வியும் எழுகிறது. எனவே, இதில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு நடவடிக்கை
எடுத்தால், விலைவாசியை ஓரளவேணும் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்,
வியாபாரிகள்.
'டோல்கேட்' கட்டணம் அதிகம்:
ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தானியங்கள் அதிகம் விளைகின்றன. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு, லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.அவ்வாறு கொண்டு செல்லும்போது, முக்கிய சாலைகளில் பயணிக்க நுழைவு கட்டணம் செலுத்த நேரிடுகிறது. உதாரணமாக, மும்பையிலிருந்து, 16 டன் சரக்கு லாரி கோவையை அடைய, மூன்று நாட்களாகிறது. சோதனைச்சாவடிக்கு மட்டும் 13,000 ரூபாய் சாலை நுழைவு கட்டணமாக செலுத்துகின்றனர். வாடகையாக, 45,000 பெறுகின்றனர். சிறிய லாரிக்கு (9 டன்) 30,000 ரூபாய் வாடகையும், டோல்கேட்டுக்கு 8,000 ரூபாயும் செலுத்த நேரிடுகிறது. விலை உயர்வுக்கு இதுவும் காரணம் என்கிறார் கோவையைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜன்.
இல்லத்தரசிகள் சொல்வது என்ன? அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது, மிகுந்த கவலையளிக்கிறது. மாதாமாதம் பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்துவோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும். வீட்டில் காய்கறித்தோட்டம் அமைத்தும், அதிகவிலை தானியங்களை, குறைந்த அளவில் பயன்படுத்தியும் செலவினத்தை கட்டுப்படுத்தலாம். பருப்பு சாம்பாருக்கு பதிலாக, புளி, வற்றல்,மோர் குழம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
--பவானி, ரேஸ்கோர்ஸ், கோவை.
ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு மாத சம்பளம் கூடுவதில்லை. ஆனால் விலைவாசி மட்டும் உயரே எகிறிக்கொண்டிருக்கிறது. உப்பு முதல் அரிசி வரை அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. சமையல் செய்ய வேண்டுமென்றாலே, மனதுக்குள் கணக்குப்போட்டுக்கொண்டே வேலையை துவக்கவேண்டியுள்ளது.
--அம்சவேணி, ராமநாதபுரம், கோவை.
நாம் பாரம்பரிய உணவு முறையையே கடைபிடிக்கிறோம். அதிலிருந்து, வேறு உணவு முறைக்கு மாறுவது சாத்தியமற்றது. முன்பெல்லாம், ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருள் செலவை, நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு3,000 ரூபாய்க்குள்ளாக அடக்கிவிட முடியும். தற்போது, விலைவாசி உயர்ந்துவிட்டதால், குறைந்தது 5,000 ரூபாய் ஆகிறது. இதனால், மாத பட்ஜெட்டில் 2,000 ரூபாய் துண்டு விழுகிறது. இதை எப்படி சரிக்கட்டுவது? விலைவாசியை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Comments