சுப்ரீம் கோர்ட்டில் முதல் தமிழ் பெண் நீதிபதி: பானுமதி இன்று பொறுப்பேற்றார்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் முதல் தமிழ் பெண் நீதிபதியாக பானுமதி இன்று பொறுப்பேற்றார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி உள்ளிட்ட4 பேர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். பானுமதி, அபய் மனோகர் சப்ரே, உதய் உமேஷ் லலித், பிரபுல்ல சந்திர பந்த் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி லோதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி பானுமதி, இதுவரை ஜார்கண்ட் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா சாமியார் வழக்கில், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் நீதிபதி பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பானுமதி, மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். கடந்த 2003ம் ஆண்டு, சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக பொறுப்பேற்றர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜார்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டில் பொறுப்பேற்கும் முதல் தமிழ் பெண் நீதிபதி என்ற பெருமை பெற்றுள்ள பானுமதி, அடுத்த 7 ஆண்டுகளுக்கு அப்பொறுப்பில் இருப்பார். டில்லி, சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடந்த ஒரு விழாவில், தலைமை நீதிபதி லோதா பானுமதி உள்ளிட்டோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Comments