ஊட்டி மலைப்பாதையில் கழன்று ஓடிய அரசு பஸ் டயர்

குன்னூர் : மலைப்பாதையில், அரசு பஸ்சின் முன் டயர் கழன்று ஓடியதால், தாறுமாறாக பாய்ந்து ஓடி பஸ் நின்றது. பஸ்சில் இருந்த, 48 பயணிகள் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பஸ், குன்னூர்- -- மேட்டுப்பாளையம் சாலையில், லாஸ் நீர்வீழ்ச்சி அருகே, நேற்று காலை, 9:30 மணிக்கு, வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென முன்பக்க டயர் கழன்று ஓடியதால், பஸ் நிலை குலைந்து பாய்ந்தது. பயணிகள் பீதியடைந்து கதறினர். சிறிது தூரம் பாய்ந்து சென்ற பஸ்சை, டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். இந்த பஸ் மேலும் சிறிது தூரம் சென்றிருந்தால், ஆற்றில் கவிழ்ந்து, பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். எதிரில் வாகனம் வந்திருந்தாலோ, மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ் நிறுத்தப்பட்டது; 48 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பயணிகள் மாற்று பஸ்களில் கோவைக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்தால், அந்த பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியை சேர்ந்த பயணி ரவிகண்ணன் கூறுகையில், ''நீலகிரியில், பெரும்பாலும் பழைய அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. கடவுளின் கருணையால், 48 பயணிகள் உயிர் தப்பினோம். பஸ் மெதுவாக வந்ததால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. டிரைவரும் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தினார்,'' என்றார்.

Comments