புதுடில்லி: குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்ப்பது
குறித்த முடிவை பிரதமர் மற்றும் முதல்வர்களின் விருப்பத்திற்கு
விட்டு விடுகிறோம் என , சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று
தீர்ப்பளித்துள்ளனர். இருப்பினும், ஊழல், ஒழுக்கக்கேடு, சட்டவிரோதம் போன்ற
குற்றங்கள் குறித்த வழக்கில் சிக்கியுள்ளவர்களை, அமைச்சரவையில் சேர்க்க
வேண்டாம் என, நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.,க்கள் அமைச்சர்களாவதை எதிர்த்து கடந்த 2004ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதில், அப்போது, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த லாலு பிரசாத் யாதவ், முகம்மது தஸ்லிமுதீன், எம்.ஏ.ஏ. பாத்மி மற்றும் ஜெயபிரகாஷ் யாதவ் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
காங்., அரசு வாதம்:
இதையடுத்து குற்றப் பின்னணி அமைச்சர்கள் குறித்த மனுவுக்கு பதில்
அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதில்
அளித்த மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், அமைச்சர்கள் அனைவரும்
பார்லிமென்ட்டிற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஒருவர்
பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், அவர் பிரதமர்
விருப்பத்தின் பேரில் அமைச்சரவையில் இடம் பெற உரிமை உண்டு,' என்று
வாதிட்டது. இதையடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் ஒரு மனு:
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் குற்றப்
பின்னணியுடன் உள்ள 13 அமைச்சர்களை நீக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில்
மனோஜ் நரூலா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். ஐந்து மூத்த
நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. இன்று இந்த வழக்கில்
தீர்ப்பு வழங்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் அறிவுரை:
சுப்ரீம்
கோர்ட் தனது தீர்ப்பில், ஊழல், ஒழுக்கக்கேடு, சட்டவிரோதம் போன்ற குற்ற
வழக்குகளில் சிக்கியுள்ளவர்களை, அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என,
அறிவுரை வழங்கி உள்ளது. இருப்பினும், இது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை
பிரதமர் மற்றும் முதல்வர்கள் வசமே விட்டுவிடுகிறோம் என, நீதிபதிகள்
குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்களை நீக்க
கோரிய பொதுநல மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.
Comments