புதுடில்லி:குவாலியரில் பாலியல் தொல்லை
குறித்த வழக்குகளை விசாரித்து வந்த விசாகா குழுவின் பெண் தலைமை நீதிபதி,
மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியின் பாலியல் தொல்லையால் தனது பதவியை
ராஜினாமா செய்தார்.
15 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி:
15 ஆண்டுகள் டில்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அப்பெண் வழக்கறிஞர், நீதித்துறை நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார்.
கடந்த ஜனவரி 2014 ஆம் ஆண்டின் அவரது பணி குறித்த அறிக்கையில், சிறப்பாகவும், நன்றாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டுமே அவரது பதவியை தொடர்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை. குவாலியரின் நிர்வாக நீதிபதியாக உள்ள மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தான் குடியிருக்கும் பங்களாவுக்கு தனியாக வந்து தன்னை சந்திக்குமாறு அப்பெண் நீதிபதிக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார்.
நீதிபதிகளுக்கு கடிதம்:
இது குறித்து தலைமை நீதிபதி லோதா மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தத்து, தாக்கூர், அனில் தவே, தீபக் மிஸ்ரா மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோருக்கும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அப்பெண் நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். தனது இல்லத்தில் நடைபெற உள்ள விழாவில் ஆபாசமான பாடலுக்கு நடனமாடுமாறு மாவட்ட பதிவாளர் மூலமாக தனக்கு அந்த நீதிபதி தகவல் தெரிவித்தாக அக்கடிதத்தில் அவர் புகார் கூறியுள்ளார்.தன் மீது கடும் கோபம் கொண்ட அவர், தவறே செய்யாதபோதும் தன்னை பலமுறை கண்டித்தாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு 11 மணிக்கு வரவேண்டிய தன்னை 10.30 மணிக்கே வருமாறும், மாலை 6 மணி வரை நீதிமன்ற பணியில் இருக்குமாறும் தனக்கு அந்த நீதிபதி தொல்லைகள் கொடுத்தார். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நான், எனது கணவருடன் அவரை சந்திக்க சென்ற போது என்னையும், எனது கணவரையும் பதினைந்து நாள் கழித்து வருமாறு கூறி அவமானப்படுத்தி பின்னர் தனக்கு பணியிடமாற்றமும் வழங்கப்பட்டதாக கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் வேறுவழியில்லாமல் நான் எனது பதவியை ஜூலை 15ந் தேதி ராஜினாமா செய்ய நேர்ந்ததாக தனது கடிதத்தில் அப்பெண் நீதிபதி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.அப்பெண் நீதிபதிக்கு தலைமை நீதிபதி லோதா, புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Comments