தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தூதர்களுடன் சுஷ்மா சந்திப்பு : புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து விவாதம்

ஹனோய் : வியட்னாம் நாட்டுக்கு சென்றுள்ள, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ், நேற்று அந்நாட்டின் ஹனோய் நகரில், தென் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை சந்தித்து, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை புதுப்பிப்பது தொடர்பாக, ஆலோசனை நடத்தினார்.

கிழக்கு நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, 'லுக் ஈஸ்ட்' ஆக இருந்தது.
அதாவது, அந்த நாடுகளுடன் இந்தியா நல்லுறவு வைத்திருக்க வேண்டும் என்ற அளவில் மட்டும் இருந்தது. இப்போது அந்த கொள்கை, 'ஆக்ட் ஈஸ்ட்' ஆக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, இந்தியா உதவ வேண்டும்; அந்நாடுகளுடன் பலவிதங்களில் உறவை மேம்படுத்த வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.பா.ஜ., அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ், வியட்னாம் சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டின் தலைவர்களை சந்தித்து பேசி வரும் நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகளை, ஹனோய் நகருக்கு அழைத்து, நாடுகளின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து விவாதித்தார். இது அவரின் இரண்டாவது சந்திப்பு. சில நாட்களுக்கு முன், மத்திய தரைக்கடல் நாடுகளின் தூதர்களுடன் அமைச்சர் சுஷ்மா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அடுத்த மாதம், வியட்னாம் நாட்டுக்கு ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ராணுவம், வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் வியட்னாமுக்கு, இந்தியா பலவிதங்களில் உதவ, பிரணாப்பின் இந்த சுற்றுப்பயணம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments