அத்துடன், 99.73 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அதிரடிப்படையில் உள்ள, துரித நடவடிக்கைக் குழுக்களுக்கு, 59 வகையான நவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், 2.59 கோடி ரூபாயில் வாங்கப்படும்.கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் கமிஷனர் அலுவலகங்களுக்கு, 1.95 கோடி ரூபாயில், கண்காணிப்பு கேமரா வாங்கப்படும்.போலீஸ் நிலையங்களுக்கு, நவீன தொழில்நுட்பக் கருவிகள், 1.75 கோடி ரூபாயில் வாங்கப்படும். சட்டம் ஒழுங்கு அல்லது பயங்கரவாத நிகழ்வுகளின்போது, சம்பவ இடங்களின் அருகில், கட்டுப்பாட்டு மையம் அமைக்க, சரியான இடம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், ஐந்து நகரும் கட்டுப்பாட்டு மையம், 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். ஒன்று சென்னையிலும், நான்கு போலீஸ் மண்டல தலைமையிடங்களுக்கும் வழங்கப்படும். முக்கிய கொலை வழக்கு, பாலியல் வன்முறை வழக்கு, பணயத் தொகை கேட்டு, ஆட்கள் கடத்தப்படும் வழக்கு, திட்டமிட்ட கொலை வழக்கு, ஆகியவற்றில் புலன் விசாரணை மேற்கொள்ள, கடுமையான குற்றங்களை விசாரிக்கும், சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்படும்.
போலீஸ் உதவி கமிஷனர் அல்லது டி.எஸ்.பி., அல்லது இன்ஸ்பெக்டர், இப்பிரிவுகளுக்கு தலைமை ஏற்பர். இவர்களுக்கு நவீன புலன் விசாரணை யுக்திகள் பயிற்றுவிக்கப்படும்.இப்பிரிவுக்கு போதிய பணியாளர்களும், வாகனங்களும், பிற பிரிவுகளில் இருந்து பெறப்படும். முதற்கட்டமாக, 60 லட்சம் ரூபாய் செலவில், 20 மாவட்டங்களில், இப்பிரிவு ஏற்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம், சாதி, மத ரீதியான பிரச்னைகளால், பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்படும் மாவட்டமாக இருப்பதால், போலீஸ் கட்டுப்பாட்டு அறை, 58 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். உளவுத் துறைக்கு, நுண்ணறிவுத் தகவல் சேகரிப்பதற்காக, நவீன கண்காணிப்பு கருவிகளும், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்கச் செய்யும் கருவிகளும், 27 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.அவசர உதவி எண் '100' மூலம், கட்டுப்பாட்டு அறைகளில் பெறப்படும் தகவல்களின் மீது, விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கவும், ரோந்து பணிக்காகவும், 107 மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படும். மூன்று மாநகரங்களுக்கு, 6 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ம் அணிக்கு, வாகன நிறுத்துமிடம், கோவைப்புதுாரில் உள்ள, தமிழ்நாடு சிறப்பு காவல் 4ம் அணியில், காவலர் படை குடியிருப்பு கட்டப்படும்.சென்னை, ஆலந்துாரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு, புதிய கட்டடங்கள் கட்டப்படும்.திருச்சி ரயில்வே போலீசாருக்கு, புதிய நிர்வாக அலுவலகம், எஸ்.பி., முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டப்படும்.காவல் தலைமை அலுவலகம், மின் கட்டணத்தை குறைக்க, 20 கிலோ வாட் திறன் கொண்ட, சூரிய சக்தி அலகுகள், 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். ஊர் காவல் மற்றும் குடிமைப் பணி பிரிவினருக்கு, ஒளி பிரதிபலிப்பு ஜாக்கெட், உயிர் காப்பு ஜாக்கெட், பொது அறிவிப்பு சாதனம், எமர்ஜென்சி விளக்கு, போன்றவை வாங்கப்படும். கொலை, பாலியல் வன்முறை மற்றும் கொடுங்குற்ற வழக்குகளில், குற்றவாளிகளை கண்டபிடிக்க, திசுக்களில் இருந்து மரபணுவை பிரித்தெடுக்க, தேவையான நவீன கருவி, 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்தார்.
Comments