பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள்: சிவசேனா ஆதங்கம்

மும்பை: நாட்டிலுள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவே உள்ளன. எனவே தான் ஒருவர் மீது எளிதாக பாலியல் புகார்களை தெரிவித்து விட முடிகிறது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மும்பை மாநகர போலீஸ் டி.ஐ.ஜி., சுனில் பிரஷ்கார் மீது மாடல் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சமூகத்தின் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. இது ஒரு பேஷனாகவே மாறி விட்டது. டி.ஐ.ஜி., சுனில் பிரஷ்கார் பல ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது மாடல் ஒருவர் அவர் மீது கூறியுள்ள பாலியல் புகாரால் ஒரே இரவில் அவர் வில்லனாகி விட்டார். இது போன்ற குற்றச்சாட்டுகள் ஒருவரை பழிவாங்க பயன்படுத்தும் ஆயுதமாகவே மாறிவிட்டது. இவ்விஷயத்தில் மாடலின் உள்நோக்கம் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இது ஒரு சாதாரண மனிதனுக்கே எழும் கேள்வி. ஆனால் இந்த கோணத்தில் போலீசார் மட்டும் யோசிக்கவே இல்லை.

டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்திற்குப் பின், இது தொடர்பான சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்படி இருந்தும் பாலியல் பலாத்கார புகார்கள் குறைந்து விட்டனவா? ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும். ஆனால் அது வரை மீடியாக்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் இமேஜை தொடர்ந்து சிதைத்துக் கொண்டே இருக்கும். நாட்டிலுள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. இதன் காரணமாக ஒருவர் மீது எளிதாக புகார்களை தெரிவித்து விட முடிகிறது. இவ்விஷயத்தில் நீதித்துறை தனது கண்களை திறந்து, குற்றமற்றவர்களுக்கு தகுந்த நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்". இவ்வாறு அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments