வீரர்கள் மத்தியில் உரை:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இரண்டு நீர்மின் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், மின் பரிமாற்ற லைன்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டவும், அங்குள்ள, லே மற்றும் லடாக்கிற்கு, நேற்று விஜயம் செய்த, பிரதமர் நரேந்திரமோடி, லே நகரில், ராணுவ வீரர்கள் மற்றும் விமானப் படையினர் மத்தியில் பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள், இங்கு பல பாதகமான அம்சங்களை, சிரமங்களைச் சந்தித்தாலும், எல்லையை காக்கும் பணியில், தொடர்ந்து மன உறுதியோடு செயல்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு உந்து சக்தி அளிக்கவே, இங்கு வந்துள்ளேன். டில்லியில் கட்டப்பட உள்ள, தேசிய போர் நினைவுச் சின்னம், எதிர்கால சந்ததியினருக்கு, ஒரு உத்வேகம் தருவதாக அமையும்.ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில், நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்பதிலும், மத்திய அரசு உறுதியாக உள்ளது. எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர், இங்கு வாழும் மக்களுடன் நல்லுறவு கொண்டிருக்கின்றனர். அதனால் தான், முன், கார்கில் பகுதி யில், பாக்., பகுதியினர் ஊடுருவிய போது, ஆடு மேய்க்கும் ஒருவர் மூலம், தகவல் பெற முடிந்தது.இவ்வாறு, மோடி பேசினார்.
பொதுக்கூட்டத்தில் ஆவேசம்:
முன்னதாக, லே நகரில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மோடி பேசியதாவது: ஊழல், நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதை, எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊழலால் மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே, ஊழலுக்கு எதிரான அனைவருடனும் சேர்ந்து, நாம் போராட வேண்டும்.நம் நாட்டில், நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், நாம் வெற்றி பெற்று விட்டால், வறுமைக்கு எதிரான போராட்டத்திலும், நாம் வெற்றி காண முடியும். மேலும், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும், மின்சாரம், ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மூலம், இணைக்க வேண்டியது அவசியம். இவ்வாறு, மோடி பேசினார்.
Comments