எபோலா வைரஸ் கொல்லி கண்டுபிடிப்பு; குரங்குக்கு கொடுத்த பரிசோதனை வெற்றி

டொராண்டோ: உலகையை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தடுப்பு மருந்து இல்லாமல் இருக்கிறது என்ற கவலையை கனடா நாட்டு ஆய்வாளர்கள் போக்கி இருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடித்த வைரஸ் கொல்லி மருந்து குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை வெற்றி அடைந்துள்ளதாக கனடாவை சேர்ந்த பொது சுகாதார ஏஜென்சி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


மேற்கு ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகி உலகை அச்சுறுத்தி வரும் மோசமான வைரஸ் கிருமி எபோலா. எபோலா பாதித்தவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்பதால், அனைத்து நாடுகளுமே தங்களது விமான நிலையங்களில் மருத்துவர் குழுவை நியமித்த தீவிர பரிசோதனை நடத்திய பிறகே வெளிநாட்டு பயணிகளை தாயகத்திற்குள் அனுமதிக்கின்றன. கடந்த வாரத்தில் லைபீரியாவில் இருந்து டில்லி வந்த 114 பேருக்கு முழு அளவில் சோதனை நடத்திய பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் எபலா வைரஸ் நோய் தடுப்பு கிருமி ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு டாக்டருக்கு போட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார். இந்நிலையில் கனடா நாட்டு ஆய்வு நிறுவனம் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளது. கனடாவின் பொது சுகாதார ஏஜென்சியை சேர்ந்த ஆய்வு குழு தலைவர் கேரி கோபின்கர் கூறுகையில், "எனது எதிர்பார்ப்பை மீறி மருந்து வேலை செய்து ஆச்சரியம் அளித்துவிட்டது" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

கனடா ஆய்வு கூடத்தில் எபோலா வைரஸ் செலுத்தப்பட்ட 18 குரங்குகள் நோய் முற்றிய நிலையில் குணப்படுத்தப்பட்டுள்ளன. எனவே மனிதர்களுக்கும் இந்த மருந்து வேலை செய்து உயிரை காப்பாற்றும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Comments