
ஆக்ஷன் ஹீரோ படம் என்றால் ஒன்று மக்களுக்காகப் போராட வேண்டும், அநியாயம்
செய்யும் வில்லனை எதிர்த்துப் போராட வேண்டும், அல்லது அரசை எதிர்த்துப்
போராட வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால்தான் ஹீரோயிசமான காட்சிகளை வைத்து
அந்த ஹீரோவின் இமேஜை இன்னும் நன்றாக உயர்த்த முடியும்.
துப்பாக்கி படத்தில்
முதல் முறையாக இணைந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் ஜோடி,
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காக்கும் ஒரு ராணுவ வீரரின்
கதையைச் சொல்லி அந்த படத்தை வெற்றிப் படமாக்கியது. கத்தி படத்தில் அதே
போல் மக்களைக் காக்கும் கதையைத்தான் உருவாக்கியிருக்கிறார்களாம். ஒரு
பன்னாட்டு குளிர்பான தொழிற்சாலையை எதிர்த்து விஜய் போராடும் கதைதான் கத்தி
படத்தின் கதை என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். கொஞ்சம் தூள்
படத்தின் கதை போலத் தெரிந்தாலும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில்
நடிக்கிறார் என்பதால் கதை கண்டிப்பாக வேறு தடத்தில் பயணிக்க வாய்ப்புள்ளது.
ஒரு
மிகப் பெரிய குளிர்பான நிறுவனத்திற்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுத்து,
அவர்களுக்காக வரைமுறையின்றி தண்ணீரையும் எடுத்துக் கொள்ள அரசாங்கம் அனுமதி
வழங்குகிறது. அதனால் பாதிக்கப்படும் ஊர் மக்களுக்காக விஜய் களத்தில்
இறங்கிப் போராடுகிறார். ஆனால், திடீரென அவர் காணாமல் போய் விடுகிறார்.
அப்போது வேறு ஒரு விஜய்யைப் பார்க்கும் மக்கள், இவர்தான் அவர் என நினைத்து
இந்த விஜய்யை அழைத்து வந்து போராட்டத்தை மீண்டும் நடத்துகிறார்கள்.
கெட்டவரான இந்த விஜய் மக்களின் பாசத்தால் கட்டுப்பட்டு போராட்டத்தை
தொடருகிறார். அப்போது காணாமல் போன விஜய் மீண்டும் வர, இரண்டு விஜய்யும்
ஒன்றாகப் போராடுகிறார்களா அல்லது மோதிக் கொள்கிறார்களா என்பதுதான் படத்தின்
மீதி கதையாம். இன்றைய சூழ்நிலைக்கு கத்தி மேல நடக்கிற கதை மாதிரி தெரியுதே...
Comments