புதுடில்லி: டில்லி ஆட்சியை 49 நாட்களில் கைகழுவிவிட்டு, லோக்சபா தேர்தலை
நோக்கி ஓடிய ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் டில்லியில் கோலோச்ச தேவையான
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, தேர்தலை நடத்த கோரி,
வீடுவீடாக கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்குகிறது.
சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் பட்டறையில் இருந்து வெளி வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரேவின் கொள்கைகளுக்கு மாற்றாக, அரசியல் கட்சியை துவக்கினார்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் முன் பதவியை விட்டு ஓடியதால், கெஜ்ரிவால் மீது டில்லி மக்களுக்கு கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. லோக்சபா தேர்தலில், டில்லியில் ஆம் ஆத்மி படுதோல்வியை தழுவியது. காலம் கடந்து ஞானம் பெற்ற கெஜ்ரிவால், விட்டதை பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இதையடுத்து, ஆம் ஆத்மியை டில்லியில் மீண்டும் காலூன்ற செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது ஸ்டைலில், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை நடத்த துவங்கிவிட்டார். கடந்த ஞாயிறு அன்று, டில்லி ஜந்தர் மந்தரில் அவர் கூட்டிய கூட்டத்தில் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, டில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவரது முயற்சி வலுப்பெற்றுள்ளது. கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், 'டில்லி சட்டசபையை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். இதற்காக, டில்லி கவர்னருக்கு ஒருவாரம் கால அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் முடிவெடுக்காவிட்டால், வீடு வீடாக சென்று, தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்துவோம்,' என்று முழங்கி உள்ளார்.
Comments