தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

புதுடில்லி: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மேஜர் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாக, லோக்சபாவில் உள்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். அதேநேரத்தில், இந்த ஆண்டு யாரும், கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை.


இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது பாரத ரத்னா விருது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5 விருதுகளை தயாரிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து 5 பேருக்கு பாரத ரத்னாவிருது வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மேஜர் தயான் சந்த், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.ஆர். ராவுக்கும் பாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாரத ரத்னா விருதை பெற்றுக்கொள்ள நேதாஜி குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நேதாஜி மரணம் தொடர்பான மர்மத்துக்கு தீர்வு காணவும்வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை தேவையில்லை என்ற போதிலும், உள்துறை அமைச்சகம், மறைந்த ஹாக்கி அணி வீரர் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் விரைந்து முடிவெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

கேல் ரத்னா விருது யாருக்கும் இல்லை:

2014, 15ம் ஆண்டுகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு யாரது பெயரையும் பரிந்துரை செய்வதில்லை என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. இது இந்திய வரலாற்றில் முதல்முறையாகும். அர்ஜூனா மற்றும் கேல் ரத்னா விருதுக்கான தேர்வுக்குழு இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
15 பேருக்கு அர்ஜூனா விருது:

கேல் ரத்னா விருதுக்கு யாரையும் பரிந்துரை செய்வதில்லை என முடிவெடுத்துள்ள தேர்வுக்குழு, அர்ஜூனா விருதுக்கு 15 பேரது பெயரை பரிந்துரை செய்துள்ளது. இந்த பட்டியலில், அகிலேஷ் வர்மா(வில்வித்தை) டின்டு லூகா( தடகளம்), எச்என் கிரிஷா(பாராலிம்பிக்ஸ்) வி. டிஜ்ஜூ( பாட்மின்டன்), கீது ஜோஷ்( கூடைப்பந்து), ஜெய் பகவன்(குத்துச்சண்டை), ஆர்.அஸ்வின்(கிரிக்கெட்) அனிர்பன் லகிரி(கோல்ப்), மம்தா புஜாரி(கபடி), சஜி தாமஸ்(படகு போட்டி),ஹூனா சித்து(துப்பாக்கி சுடுதல்) அனாகா அலன்காமனி(ஸ்குவாஷ்), டாம் ஜோசப்(கைப்பந்து), ரேணுபாலா சாணு( பளுதூக்குதல்) மற்றும் சுனில் ராணா(மல்யுத்தம்) ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Comments