சென்னை: அரசியல் களத்தில் தங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும்,
பகைவர்கள் எங்கோ ஓடி ஒளிந்து விட்டார்கள் என்றும் அ.தி.மு..க., பொது
செயலாளர் ஜெ., பேசியுள்ளார். வேட்பாளரை தேர்வு செய்ய உரிய அவகாசம் இல்லாமல்
போனதால் உள்ளாட்சி இடைத்தேர்தலை தி.மு.க., புறக்கணிக்க முடிவு
செய்துள்ளது.
அ.தி.மு.க.,வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் தொண்டர்களிடம் பேசுகையில், தன்னை தேர்வு செய்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது;
மாறாத பற்றுடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் என்னை மீண்டும் தேர்வு செய்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். போற்றப்பட வேண்டியது. உண்மை, உழைப்பு, உயர்வு, பின்பற்றப்பட வேண்டியது கனிவு, பணிவு, துணிவு, பேணப்பட வேண்டியவை . உழைப்பே உயர்வு தரும் புரட்சி தலைவரின் தாரக மந்திரம் ஆகும். அண்ணா துரையின் அமுத மொழிக்கு ஏற்ப அயராது உழைப்பேன்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டுள்ள அ.தி.மு.க, மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளது. எனக்காக வேட்பு மனு தாக்கல் செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கால் நூற்றாண்டு ( 26 ஆண்டு காலமாக ) நான் பொதுச்செயலராக பணியாற்றி வருகிறேன். தற்போது அ.தி.மு.,க பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக உள்ளது. சட்டசபை தேர்தல், நகராட்சி, மாநகராட்சி என வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்தோம். பார்லி., தேர்தலில் யாரும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்துள்ளோம். அரசியல் களத்தில் எதிரிகள் இல்லை. எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர் என்றோ மறைந்தார். காணும் இடங்களில் எல்லாம் மக்கள் தான் தெரிகின்றனர். தமிழக மக்கள் அடையாளம் காணுகின்ற ஒரே அரசியல் இயக்கம் அ.தி.மு.க.தான். மக்களுக்கு நன்மை செய்வதே ஒரே கொள்கை. மக்களுக்காக உழைத்து கொணடே இருக்க வேண்டும் என்பதே லட்சியம் . ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு வெற்றிதான். இணைந்து ஒற்றுமையாக செயல்படுவோம். வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும். அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உங்களை சேரும். இவ்வாறு ஜெ., பேசினார்.
கால அவகாசம் வழங்காத கொடுமை : இதற்கிடையில் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அளிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;
தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே வேட்பு மனு தாக்கலும் துவங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்- 4ம் தேதி கடைசி நாள் ஆகும். இடையில் விடுமுறை என்பதால் , ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வேட்பாளரை அறிவித்துள்ளது அ.தி.மு.க., மாநில அரசின் போக்கில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாலும் எதிர்கட்சிகள் வேட்பாளரை முடிவு செய்ய கால அவகாசம் வழங்காத கொடுமையை கண்டிக்கும் வகையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தி.மு.க., புறக்கணிப்பு செய்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் திருநெல்வேலி, தூத்துக்குடி , கோவை மாநகாராட்சி, அரக்கோணம், கடலூர், விருத்தாச்சலம், குன்னூர், புதுக்கோட்டை, கொடைக்கானல், ராமநாதபுரம், சங்கரன் கோவில் மற்றும் 7 பேரூராட்சி தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.
Comments