சென்னை: இலங்கை பாதுகாப்பு துறை இணைய தளத்தில் வௌியான முதல்வர் ஜெயலலிதா
குறித்த சர்ச்சை கட்டுரையால் அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தி வரும்
நிலையில், சென்னையில் நடக்கும், 15 வயது உட்பட்டோருக்கான போட்டியில்
கலந்து கொள்ள வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள், பாதுகாப்பு காரணங்களை கருதி
இலங்கைக்கு திரும்பி சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், இலங்கை
அரசின் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் பிரதமர்
நரேந்திரமோடியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் சம்பந்தப்படுத்தி
சர்ச்சைக்குரிய கட்டுரையும், படமும் வௌியிடப்பட்டது. இதற்கு இந்திய
தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக
அந்த கட்டுரை நீக்கப்பட்டது. மேலும், அதே இணையதளத்தில் பிரதமர்
மோடியிடமும், முதல்வர் ஜெயலலிதாவிடமும் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு
கோரி செய்தி வௌியிட்டது.இருப்பினும், இலங்கை அரசின் இந்த குசும்புத்தனம், அ.தி.மு.க., தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும், அ.தி.மு.க., தொண்டர்களின் ஆவேசம் குறைந்தபாடில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சேவை கிண்டலடித்தும், விமர்சனம் செய்தும் ஏராளமான பேனர்கள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ராஜபக்சேவின் உருவபொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இன்று, தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில், திரைப்படத்துறை சார்ந்த அனைத்து அமைப்புக்களும் கலந்து கொள்ளும் போராட்டம் ஒன்று, இலங்கை துணைத் தூதரக அலுவலகம் முன் நடந்து கொண்டிருக்கிறது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், சென்னையில் நடக்கும் 15 வயது உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து 16 வீரர்கள் நேற்று இரவு கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களை சந்தித்த தமிழக போலீசார், தற்போதுள்ள சூழ்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் தமிழகத்தில் இருந்து வௌியேறுவது நல்லது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இலங்கை வீரர்கள், இன்று காலை 9.15 மணி விமானத்தி்ல் இலங்கை திரும்பினர். சென்னையில், 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள், இன்று முதல் 7ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில், 12 அணிகள் கலந்து கொள்கின்றன.லோக்சபா, ராஜ்யசபாவில் ஜெ., விவகாரம்: தமிழக முதல்வரை தரக்குறைவாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியான விவகாரத்தில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என லோக்சபாவில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை வலியுறுத்தினார். தொடர்ந்து இலங்கை அதிபருக்கு எதிராக அ.தி.மு.க.,வினர் குரல் எழுப்பினர். இதனால் அவையை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.இன்று ராஜ்யசபாவில் அமளிக்கிடையே பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது மிகவும் 'சீரியஸ்' ஆன விஷயம். இவ்விவகாரத்தில் இந்தியா, இலங்கைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. விரைவில் இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார். இதே போல், லோக்சபாவில் பேசிய பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, இலங்கையின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதை அரசு கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
Comments