தமிழக
மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம்
போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர்
நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல்
செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன் சில
ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.இதை அறிந்த தமிழக எம்.பி.,க்கள்
பார்லிமென்டில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., பா.ஜ., -
பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,க்கள், இலங்கை
அரசின், செயலை கண்டித்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில், இலங்கை அரசுக்கு
எதிராக அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் எழுந்த
எதிர்ப்பை அடுத்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதோடு அந்த
செய்தியையும் நீக்கியது.
இந்நிலையில்,
தமிழர்களின் உரிமை வாழ்க்கை ஆகியவற்றை பாதுகாக்க முதல்வர் தொடர்ந்து
போராடும் போதெல்லாம் அதை குற்றம் சாட்டுவதையோ, கேவலப்படுத்துவதையோ அல்லது
கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக கொண்டுள்ள இலங்கை அரசை கண்டிக்கும்
வகையிலும், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை உடனடியாக மூட
வலியுறுத்தி இன்று(ஆகஸ்ட் 4ம் தேதி) தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள்
சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இலங்கை துணை தூதரகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதில் நடிகர் சங்கம், சின்னத்திரை
சங்கங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, திரையரங்கு மற்று
விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றுள்ளனர்.
காலை 10 மணிக்கு துவங்கிய இந்த
ஆர்ப்பாட்டத்தில் விஜய், சூர்யா, சரத்குமார், விக்ரமன், கேயார்,
எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மன்சூர் அலிகான், எடிட்டர் மோகன், கருணாஸ்,
ஆர்.வி.உதயகுமார், பொன்வண்ணன், வினய், பார்த்திபன், தியாகு,
ஆர்.சுந்தர்ராஜன், சீமான், பாண்டியராஜன், ரமேஷ் கண்ணா, சுபாஸ் சந்திரபோஸ்,
கே.ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.கே.செல்வமணி, வினய், வையாபுரி, குண்டு
கல்யாணம், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்களும்
பங்கேற்றுள்ளனர்.
படப்பிடிப்புகள் ரத்து : தமிழ் திரையுலகினரின் ஆர்ப்பாட்டத்தையொட்டி தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments