திமுக, தமிழ் அமைப்புகளால் அழிந்து போனது சமஸ்கிருதம்: கன்னட எழுத்தாளர் பைரப்பா பேச்சு

திமுக மற்றும் தமிழ் அமைப்புகளால்தான் சமஸ்கிருதமே அழிந்து போனது என்று பிரபல கன்னட எழுத்தாளர் பைரப்பா கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா பேசியதாவது: மோடி தலைமையிலான மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண் டாடுவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் பண்டைய வரலாறையும், பெரும் கலைகளையும் சமஸ்கிருதத்தை தவிர்த்து விட்டு முழுமையாக‌ புரிந்து கொள்ள முடியாது. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே அன்னை. ஆனால் சமஸ்கிருத மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. சமஸ்கிருதம் அழிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் முக்கிய கட்சியாக இருக்கும் திமுக முக்கிய காரணம். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் சமஸ்கிருதத்தை அழிக்க, பல முறையான‌ திட்டங்களை தீட்டி போராடினர். சில அடிப்படைவாத தமிழ் அமைப்புகளும் அவர்களோடு சேர்ந்து தீவிரமாக போராடியதால்தான், இன்றைக்கு சமஸ்கிருதம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் சமஸ்கிருதம் இரண்டற கலந்திருக்கிறது. கன்னட மொழியில் சரிபாதி சமஸ்கிருதமே இருக்கிறது. ஆனால் சில கன்னட எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் சமஸ்கிரு தத்தை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறார்கள். இதற்கு திமுக போன்ற தமிழ் அமைப்புகளின் போராட்டம்தான் காரணம்.அவர்களை பார்த்து இவர்களும் கெட்டுப்போய் விட்டார்கள். சமஸ்கிருதத்தை எதிர்த்துவிட்டு ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டார்கள். ஆங்கில மொழியின் தாக்கத்தால் கன்னடர்களே கன்னடத்தை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றால்தான் கன்னடத்தை ஒழுங்காக அறிந்துகொள்ள முடியும் இவ்வாறு பைரப்பா பேசினார்.

Comments