பெண்களின் புதிய பேஷன் ‘பலாத்காரப் புகார்’... சிவசேனா பேச்சால் சர்ச்சை

பெண்களின் புதிய பேஷன் ‘பலாத்காரப் புகார்’... சிவசேனா பேச்சால் சர்ச்சைமும்பை: 'தங்களுக்கு பிடிக்காத ஆண்களை பழிவாங்குவதற்காக, அவர்கள் மீது, பாலியல் பலாத்கார புகார் கொடுப்பது தற்போதைய பெண்களிடையே புதிய பேஷனாக உருவெடுத்துள்ளது என்ற சிவசேனா கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.

நாடு முழுவதும் நாள்தோறும் பெண்களுக்கெதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், சுனில் பிராஸ்கர் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆறு மாதத்துக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கடுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ள கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளது சிவசேனா. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- வில்லனான நாயகன்... குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள போலீஸ் அதிகாரி, பல ஆண்டுகளாக பணியாற்றி, நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்துள்ளார். ஆனால், மாடல் அழகி ஒருவர் கொடுத்த புகாரால், ஒரே நாளில், அவர் வில்லனாகி விட்டார். புதிய பேஷன்... இப்போதெல்லாம், பெண்கள், தங்களுக்கு பிடிக்காத ஆண்களை பழிவாங்குவதற்கு பாலியல் பலாத்கார புகாரை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இந்த போக்கு, பணக்கார சமூகத்தில் புதிய பேஷனாக உருவெடுத்துள்ளது. விழிப்புணர்வு தேவை... நம் நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு சாதகமாகவே உள்ளன. யார் வேண்டுமானாலும் யாருக்கு எதிராகவும் புகார் கூறலாம் என்ற நிலை தான் உள்ளது. நீதித்துறை இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். காலதாமதம் ஏன்? சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆறு மாதங்களுக்கு பின் இந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இத்தனை நாட்கள் புகார் கொடுக்காமல், அவர் என்ன செய்தார் என, தெரியவில்லை' என இவ்வாறு அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments