மகாராஷ்ட்ரா மாநிலம், புனே அருகில் உள்ள மாலின் என்ற கிராமத்தில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் எச்சரிக்கையை கவனித்திருந்தால், இந்த சோக சம்பவம் நடந்திருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, மாலை 6 மணிக்கு நாசாவின் இணைய தளத்தில் இந்த மண்சரிவு குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மண்சரிவு சம்பவம் ஏற்பட்ட மாலின் கிராமம் அடங்கி உள்ள பீமாசங்கர் பகுதியில் 175 மி.மீ., மழை பொழிவு பெய்தது. இதையடுத்து, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படலாம் என நாசா புகைப்படத்துடன் கூடிய எச்சரிக்கை செய்தியை வழங்கியது. ஆனால் இந்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கவனிக்க தவறிவிட்டனர்.
இது குறித்து புனேயில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் எஸ். பாய் கூறுகையில், 'இந்த எச்சரிக்கையை டில்லியில் உள்ள தலைமை வானிலை ஆய்வு மையம் கண்காணித்து, தகவல் கொடுத்திருக்க வேண்டும்,' என்று தெரிவித்தார். புனே மண்சரிவு குறித்த நாசாவின் எச்சரிக்கையை எஸ்.ஏ.என்.டி.ஆர்.பி., என்ற தெற்காசியாவில் உள்ள அணைகள், நதிகள் மற்றும் மக்கள் இணைப்பு அமைப்பு கண்காணி்தது, அதை தனது பேஸ்புக்கில் வெளியிட்டது. அதையும் இந்திய வானிலை மையம் கவனிக்கவில்லை. இதனால் பல உயிர்களை பலி கொண்ட புனே மண்சரிவு சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதுபோன்ற சர்வதேச அமைப்புக்களின் வானிலை குறித்த எச்சரிக்கை தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் புறக்கணிப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1979ம் ஆண்டு, குஜராத்தில் உள்ள மோர்பி அணை உடைப்பு குறித்து எச்சரிக்கப்பட்டும், அதை கவனிக்காததால் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செயற்கைகோள்கள் உதவியுடன் பெறப்பட்ட தகவல்கள் குறித்து அமெரிக்கா பலமுறை எடுத்துக்கூறியும் அது இந்திய அதிகாரிகளால் கவனிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.
Comments