திருப்புவனம் : சிவகங்கை, திருப்புவனத்தில் கணவர் இறந்த செய்தி கேட்ட 15
நிமிடத்தில் மனைவியும் இறந்தார். திருப்புவனம் அக்ரஹார தெருவை சேர்ந்த
தம்பதி கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார், 74; வசந்தா, 62. கடந்த 1974ல் திருமணம்
நடந்தது. கிருஷ்ணமூர்த்தி விவசாயம் செய்து வந்தார். மகன் கோவிந்தராஜன்,
மகள் சீதாலட்சுமி. கிருஷ்ணமூர்த்திக்கு 74 வயதிலும் திடகாத்திரமாக
இருந்தார். சில நாட்களாக சளித் தொல்லையால் அவதிப்பட்டார்.
நேற்று,
மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமான நிலையில், மதியம் 12 மணிக்கு நெஞ்சு வலி
ஏற்பட்டு கீழே சரிந்தார். பரிசோதித்த போது அவர் இறந்தது தெரிந்தது.
உறவினர்கள் அங்கு கூடிய நிலையில், 12.15 மணிக்கு அவரது மனைவி வசந்தாவும்
மயங்கி விழுந்தார். '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சோதித்த போது அவரும்
இறந்தது தெரிந்தது. ஒரே நேரத்தில் தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியினரை
துக்கத்தில் ஆழ்த்தியது. இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கு செய்ய
உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Comments