சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது. -தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன் விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.
மாநகரத்தின் கொண்டாட்டம்
சென்னை தினம் இப்படிப் பட்ட ஒரு மாநகரத்தின் கொண்டாட்டம். இதைக்
கொண்டாட வேண்டும் என முதன் முதலில் நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா,
பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர் தொடங்கி
வைத்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா
ரவீந்திரநாத், ஆர். ரேவதி, வி. ஸ்ரீராம் ஆகியோரும் இணைந்து நகரத்தின்
பல்வேறு பகுதி மக்களை ஊக்குவிக்க, சென்னை தினக் கொண்டாட்டம் சென்னை வாரமாக
விரிவடைந்துள்ளது. வரலாற்று நடைப் பயணங்கள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், அஞ்சல் தலை,புகைப்படக்
கண்காட்சிகள், எனப் பற்பல நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால்
ஒருங்கிணைத்து நடத்தப் படுகின்றன.
புகைப்பட கண்காட்சி:
இந்த ஆண்டு சென்னை தினத்தை சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலை கழகத்தின் தொடர்பியல்துறையினர் குதூகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக வருகின்ற 18, 19 தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா கலையரங்கில் புகைப்பட கண்காட்சியினை நடத்துகின்றனர். சென்னையில் உள்ள நூறாண்டுகளைக்கடந்த பழம்பெருமை மிக்க கட்டிடங்கள்,வழிபாட்டுத்தலங்கள் உள்ளீட்ட பல்வேறு விஷயங்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.
பல்கலையின் தொடர்பியல்துறை மாணவர்கள் இதற்காக தேடியலைந்து எடுத்த படங்களே கண்காட்சியில் இடம் பெற இருக்கின்றது என்பது இன்னும் விசேஷமாகும்.
கண்காட்சியினை அனைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக 18,19 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை திறந்திருக்கும்.இது தொடர்பான விவரங்களுக்கு துறையின் உதவி பேராசிரியர் கலைச்செல்வன்(போன் எண்:9941168254) மற்றும் மணிமேதன் (9500268741).
Comments