புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை குறைக்கப்படுவது இந்த மாதத்தில் 3வது முறையாகும்.
அதேநேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய்
நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ந்து வருவதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.51 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. உள்ளூர் வரியை சேர்க்கும் போது, விலை குறைப்பு ரூ.1.82 ஆக இருக்கும்.
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதன் மூலம், டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 70.33 லிருந்து ரூ.68.51 ஆக குறைந்துள்ளது.பெட்ரோல் விலை, கோல்கட்டாவில் ரூ.1.89 குறைந்து 78.03லிருந்து குறைந்து 76.14க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் ரூ.1.91 குறைந்து, 78.32லிருந்து குறைந்து 76.41க்கு விற்பனை செய்யப்படும். சென்னையில், ரூ.1.92 குறைவதன் மூலம், 73.47லிருந்து ரூ.71.55 க்கு விற்பனை செய்யப்படும்.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு உள்ளூர் வரியுடன் சேர்த்து ரூ.1.09ம், பின்னர் மீண்டும் சில நாட்கள் கழித்து லிட்டருக்கு ரூ.2.18ம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டீசல் விலை 50 காசுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இப்போதும் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட் வரியுடன் சேர்த்து டில்லியில் 57 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.58.97 ஆக இருக்கும். டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வரிக்கு ஏற்ப மாறுபடும். டீசல் விலை, கோல்கட்டாவில், 59 காசுகள் அதிகரிப்பதன் மூலம், ரூ.63.22லிருந்து ரூ.63.81க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் 63 காசுகள் அதிகரிப்பதன் மூலம், ரூ.66.63லிருந்து ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படும். சென்னையில் டீசல் விலை 62 காசுகள் உயர்வதால், ரூ.62.30லிருந்து அதிகரித்து ரூ.62.92க்கு விற்பனை செய்யப்படும்.
விலை மாற்றம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
Comments