தமிழகத்தில் 100 சதவீதம் வங்கி சேவை : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

மதுரை: ''தமிழகத்தில் சில மாதங்களில் 100 சதவீதம் வங்கி சேவையை அனைத்து மக்களும் பெற்றுவிடுவார்கள்,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசினார்.

மதுரையில் நடந்த 'பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின்' துவக்க விழாவில் அவர் பேசியதாவது:


பிரதமர் மோடி ஆக.,15ல் தேசிய கொடியேற்றி நாட்டு மக்களிடம் பேசும் போது, இந்த திட்டத்தை அறிவித்தார். 13 நாட்களில் நாடு முழுவதும் துவங்கப்படுகிறது. இத்திட்டத்தினால் நிதி சார்ந்த அனைத்து சேவைகளும் வங்கிகள் மூலம் மக்களுக்கு கிடைக்கும். 'உங்கள் வங்கி கணக்கு, வாழ்க்கை கணக்கை துவக்குகிறது' என்பதை கருத்தாக கொண்டு திட்டம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். ஏற்கனவே வங்கி கணக்கு இருந்தாலும், இதில் சேர்ந்து கொள்ளலாம். இதனால் சாமானிய மக்களின் கைகளிலும் செல்வம் இருக்கும். நாட்டில் 58.7 சதவீதம் பேரிடம் தான் வங்கி கணக்கு உள்ளது. இன்னும் 60 சதவீதத்தை எட்டவில்லை. தமிழகத்தில் 97 சதவீதம் மக்கள் வங்கி சேவைகளில் இணைந்துள்ளனர். அதை எளிதாக 100 சதவீதமாக மாற்றிவிடலாம். இதற்கு பல மாதங்கள் கூட தேவையில்லை. மதுரையில் ஒரே நாளில் 39,000 வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இது 50 ஆயிரத்தையும் தாண்டலாம். சேமிப்பு, கடன் உதவி, காப்பீடு, ஓய்வூதியம் என அனைத்து வரவு, செலவுகளும் வரும்காலங்களில் வங்கிகள் வழியாகத்தான் நடக்கும். அனைத்து கிராமங்களும் வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன, என்றார்.

கலெக்டர் சுப்ரமணியன் பேசுகையில், '' மக்களிடம் சேமிப்பை அதிகரிக்க இத்திட்டம் ஒரு வாய்ப்பு. தனியார் நிதி நிறுவனங்களில் மக்கள் ஏமாறத்தேவையில்லை. மாவட்டத்தில் 41 வங்கிகள் 413 கிளைகளை கொண்டுள்ளன. இதன் மூலம் அனைத்து மக்களும் 100 சதவீதம் வங்கி சேவையை பெற முடியும்,''என்றார்.

ஐ.ஓ.பி., வங்கி செயல் இயக்குனர் சவாலி, கனரா வங்கி பொது மேலாளர் லட்சுமிபதி குமார், நபார்டு வங்கி பொதுமேலாளர் நடராஜன், சிட்டி யூனியன் வங்கி உதவி பொது மேலாளர் மவுனசாமி, முதன்மை மேலாளர் ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர். பிரதமர் மோடி இத்திட்டத்தை டில்லியில் துவக்கி வைத்த நிகழ்ச்சியும் 'மெகா' திரையில் ஒளிபரப்பப்பட்டது.

Comments