தலைமை நீதிபதி பதவிக்கு தகுதியற்றவர் கட்ஜு: முன்னாள் அமைச்சர் சாந்திபூஷண் சாடல்!

தலைமை நீதிபதி பதவிக்கு தகுதியற்றவர் கட்ஜு: முன்னாள் அமைச்சர் சாந்திபூஷண் சாடல்!டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது தலைமை நீதிபதி பதவிக்கு எந்த வித தகுதியுமே இல்லாதவர் மார்க்கண்டேய கட்ஜூ என்று முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷண் சாடியுள்ளார். அண்மை காலமாக ஊழல் நீதிபதிகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ முன்வைத்து வருகிறார். இதில் பல உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் மீதும் குற்றம்சாட்டி வருகிறார்.

மேலும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு செயல்பாட்டுக்கும் எதிராகவும் கருத்துகளை கட்ஜூ தெரிவித்து வருகிறார். இது குறித்து டெல்லியில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷண் கூறியதாவது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்கு பல்வேறு சட்ட நிபுணர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அறிகிறேன். ஊழல்வாதிகள் நீதிபதிகளாவதைத் தடுக்கவும், வெளிப்படையாக நீதிபதிகள் நியமனம் வேண்டும் என்று விரும்பும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் தற்போதுள்ள நீதிபதிகள் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும். தேர்வுக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு உத்தேசித்துள்ள தேசிய நீதித்துறை ஆணையத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தவர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் சேர்க்க வேண்டும் என்று கட்ஜு வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் எந்த நோக்கத்துக்காக நீதிபதி நியமன விவகாரத்தை எழுப்பி சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் வெளியிட்டார் என்பது தெளிவாகி விட்டது. தேசிய நீதித்துறை ஆணையத்தில் தம்மைச் சேர்க்க வேண்டும் என்ற மறைமுகமான கோரிக்கையைத்தான் கட்ஜூ வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமை நீதிபதி பதவிக்கு கட்ஜூ தகுதியற்றவர் என்பதை அவரது அண்மைக் கால செயல்பாடுகள் தெளிவாக்கியுள்ளன. தேசிய நீதித்துறை ஆணையத்துக்கு கட்ஜூவின் பெயரை மத்திய அரசில் யார் முன்மொழிந்தாலும் அது தவறானது.

Comments