அதிகாலையில் தொழுகை
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து
இறைவனை தொழுதனர். இன்று மசூதிகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
அன்புடன் வாழ்த்து
தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும், இன்று காலை முதலே சிறப்பு வழிபாடு
நடைபெறுகிறது. இறைவனை தொழுதுவிட்டு தங்களது நண்பர்களை கட்டித்தழுவி ரம்ஜான்
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
உறவினர்களுக்கு வாழ்த்து
புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது
மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
நேற்றே கொண்டாட்டம்
இதனிடையே, தமிழகத்தின் சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை ரம்ஜான்
பண்டிகையைக் கொண்டாடினர். அரபு நாடுகளில் பிறை தென்பட்டதை அடுத்து,
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இஸ்லாமியர்கள் பெருநாள்
தொழுகையை மேற்கொண்டனர்.
சிறுவர்கள் உற்சாகம்
சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஜாக் அமைப்பின் பள்ளிவாசலில், ஈகைப் பெருநாளை
முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள்,
சிறுவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு இறைவனை வணங்கினர்.
கமகமக்கும் பிரியாணி
இஸ்லாமியர்களின் உணவு என்றாலே நினைவுக்கு வருவது பிரியாணி தான். அதுவும்
பண்டிகை காலம் என்றால், சிறப்பு கவனம் செலுத்தி பிரியாணியை சமைத்து
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்வார்கள். பண்டிகைக்
காலங்களில் வீட்டுக்கு முன்பாக அண்டா வைத்து பிரியாணியை தயாரிப்பது
வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது பண்டிகை காலங்களில் பிரியாணியை
இல்லத்தில் தயாரிப்பதை தவிர்த்து கடைகளில் ஆர்டர் கொடுத்து வாங்குகின்றனர்.
ஆர்டர் கொடுத்தால் பிரியாணி ரெடி
இப்போதெல்லாம் பார்சல் பிரியாணியானது பாக்கெட் பிரியாணி , பக்கெட்
பிரியாணி, டப்பா பிரியாணி, எனப் பல வடிவங்களில் கடைகளில் விற்பனையாகிறது.
ஒரு கிலோவில் தொடங்கி பத்து கிலோ வரைக்கும் பிரியாணி பல வடிவங்களில்
விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஆர்டர் கொடுத்தால், கட்டணம் எதுவுமின்றி
வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கின்றனர். இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி
பிரியாணி விற்பனை சூடுபிடித்துள்ளது.
Comments