நிதிஷும் நானும் கை கோர்த்தது போல மாயாவதியும் முலாயமும் கூட்டணி வைக்க வேண்டும்: லாலு பிரசாத்

நிதிஷும் நானும் கை கோர்த்தது போல மாயாவதியும் முலாயமும் கூட்டணி வைக்க வேண்டும்: லாலு பிரசாத்பாட்னா: மதவாத சக்திகளுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் யோசனை தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலில் மரண அடி வாங்கியதால் சட்டசபை இடைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவும் அதிரடியாக கூட்டணி அமைத்துள்ளனர். இருவரும் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். கால் நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு லாலு பிரசாத் யாதவ் அளித்த பேட்டி: ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைப்பது என்பது காலத்தின் கட்டாயம். இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் மண்டல் ஆதரவு சக்திகள் அனைவரும் 'கமண்டல'வாதிகளுக்கு எதிராகவும் பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். நோன்பிருந்த முஸ்லிம் ஒருவரது வாயில் சிவசேனா எம்.பி. உணவை திணித்தது நாடே பார்த்தது. மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய அவர்கள், தங்களது மதவாத செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். அதை தடுக்கவே ராஷ்டிரிய ஜனதா தளமும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்துள்ளன. லோக்சபா தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸும் இணைந்து 30% வாக்குகளைப் பெற்றன. இதனுடன் ஐக்கிய ஜனதா தளத்தின் 15% வாக்குகளையும் இணைத்தால் பாரதிய ஜனதா காணாமல் போய்விடும். குர்தாவை கொடுத்த மக்கள் பைஜாமாவையும் தருவார்கள் என்ற முழக்கத்துடன் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. பாரதிய ஜனதா எப்போதும் 'அரை டவுசர்' ஆர்.எஸ்.எஸ். கலாசாரத்தைத்தான் விரும்பும். அதனால் அவர்களுக்கு அரை டவுசர்தான் பொருத்தமானது. சமூக நீதி பேசும் "மண்டல் கமிஷன் ஆதரவு" சக்திகள் இணைந்திருப்பது கண்டு பாரதிய ஜனதா கதிகலங்கிப் போயுள்ளது. பீகாரில் நாங்கள் முன்னெடுத்துள்ள இந்த 'ஒருங்கிணைந்த அரசியல்" யுக்தியை இதர மாநிலங்களிலும் மண்டல் ஆதரவு சக்திகள் பின்பற்ற வேண்டும். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங்கும் மாயாவதியும் இணைந்து செயல்பட வேண்டும்.

Comments