சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மறைந்த அசோக் குமாருக்கு பதவி
நீட்டிப்பு வழங்கிய விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதிகள் மீது
மார்கண்டேய கட்ஜூ புகார் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும்
சர்ச்சையை கிளப்பிவிட்டது. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது.
தற்போது முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மீது புதிய
குற்றச்சாட்டை கட்ஜூ முன்வைத்துள்ளார்.
இது பற்றி கட்ஜூ தமது இணைய பக்கத்தில் எழுதி இருந்ததாவது:
- கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்த போது நீதிபதிகள் நியமனக்
குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதி கபாடியாவை நான் சந்தித்தேன். சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்க
முயற்சி நடப்பதை அறிந்து அவர் மீது ஊழல் புகார்கள் இருப்பதாக கபாடியாவிடம்
தெரிவித்தேன்.
- அந்த எச்சரிக்கையையும் மீறி அந்த நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக
பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்
போராட்டம் நடத்தியதால் அந்த பரிந்துரை திரும்பப் பெறப்பட்டது.
- அந்த நீதிபதி மீது பெருமளவில் ஊழல் மற்றும் நில அபகரிப்பு புகார்கள்
வெளிவந்ததால், சிக்கிம் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர்
அவர் மீது பதவி பறிப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் அதற்கு முன் அவர்
தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இச்சம்பவம் நடந்து ஓராண்டு கழித்து நீதிபதி கபாடியாவை ஒரு நிகழ்ச்சியில்
சந்தித்தேன். ஊழல் புகார் இருப்பதாக நான் எச்சரித்தபோதும் அந்த நீதிபதி
பெயரை பரிந்துரை செய்தீர்கள்.
- இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் பேராட்டம் நடத்தியதால், உச்சநீதிமன்றத்துக்கு
தர்மசங்கடம் ஏற்பட்டு விட்டது என்று கூறினேன்.
- அதற்கு கபாடியா கூறும்போது, நீங்கள் தெரிவித்த தகவலை தலைமை நீதிபதியிடம்
கூறினேன். அவர் மீது வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன.
- தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன், நான் சென்னை உயர் நீதிமன்ற
தலைமை நீதிபதியாக இருக்கும்போதே, எனக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும்.
அவர் மீதான புகார்களில் உண்மை இல்லை என்று கூறி, உச்சநீதிமன்ற நீதிபதி
நியமனத்துக்கு பரிந்துரை செய்தார். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கட்ஜூ குறிப்பிடும் நீதிபதி பி.டி. தினகரன் என்று கூறப்படுகிறது. அதே
நேரத்தில் இந்த தகவலை தமது இணையப் பக்கத்தில் வெளியிட்ட சில மணி
நேரங்களிலேயே அதை நீக்கியும் இருக்கிறார் கட்ஜூ என்பதும்
குறிப்பிடத்தக்கது.
Comments