அறிமுகத்திலேயே அபாரம்... 77கி பிரிவில் 149கி பளு தூக்கி தங்கம் வென்ற தமிழகத்தின் சதீஷ் சிவலிங்கம்!

வேலூர்: கிளாஸ்கோடு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழக வீரர் சாதனை படைத்துள்ளார். ஸ்காட்லாந்து கிளாஸ்கோடு நகரில் 71 நாடுகள் பங்கேற்கும் 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் இந்திய சார்பில் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை செய்துள்ளார். வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். சிவலிங்கமும் கடந்த 1985 முதல் 87 வரை தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஜெபல்பூர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தற்போது இவர் விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக உள்ளார். தந்தை வழியில் தானும் பளுதூக்கும் வீரராக வேண்டும் என்ற லட்சியத்திலேயே வளர்ந்த, சதீஷ்குமார் ‘முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்ற குறளை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது சாதனை புரிந்துள்ளார்.

10ம் வகுப்பில் தொடங்கிய பயிற்சி... சதீஷ்குமார் சத்துவாச்சாரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த போதே, அந்த பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார்.

பயிற்சிக் கூடம்.. சதீஷ்குமாரின் பளு தூக்கும் திறமையைக் கண்டு வியந்து போன உடற்பயிற்சி கூட நிர்வாகிகள் சதீஷ்குமாரை வேலூர் சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சி கூடத்தில் சேர்த்தனர்.

கல்லூரி வாழ்க்கை... அப்பயிற்சி கூடம் மூலமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற சதீஷ்குமார், பள்ளி மாணவர்கள் அளவிலான தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். அதன் பின்னர் மேல்விஷாரத்தில் உள்ள அப்துல்ஹக்கீம் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்தார். படித்து கொண்டே பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

ரயில்வே அணி... 3-ம் ஆண்டு பட்டபடிப்பை படித்த போது தென்னக ரயில்வேயில் பணியில் அமர்ந்த சதீஷ்குமார், தொடர்ந்து தென்னக ரயில்வே அணி வீரராக களத்தில் இறங்கினார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தொடர் வெற்றிகள்... அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011-ம் ஆண்டு தென்கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012ம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013-ம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

புதிய சாதனை... தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சதீஷ்குமார் நேற்று காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் 149 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் இந்த பிரிவில் 148 எடை இதுவரை தூக்கியுள்ளனர். சதீஷ்குமார் 149 கிலோ பளுவைத் தூக்கி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கம்.... மகனின் சாதனை குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், ‘சதீஷ்குமார் வென்ற பதக்கங்கள் வெற்றி பெற்ற போட்டிகள் எங்களால் கணக்கிட முடியாத அளவுக்கு உள்ளது. அவரின் கடும் பயிற்சியால் வெற்றி கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியிலும் சதீஷ்குமார் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

தென்கொரிய போட்டி... அடுத்ததாக வருகிற அக்டோபர் மாதம் தென்கொரியாவில் நடைபெற உள்ள பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளார். அப்போட்டியிலும் சதீஷ்குமார் மேலும் சாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள்.

இதுதான் அறிமுகம் காமன்வெல்த் போட்டிகளில் சதீஷ் சிவலிங்கம் பற்கேற்பது இதுதான் முதல் முறையாகும். முதல் முறையிலேயே அவர் தங்கத்தைத் தட்டிச் சென்று அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Comments