காமன்வெல்த்: 6வது நாளில் இந்தியா அபாரம்- 9 பதக்கம் வென்று 36 பதக்கங்களுடன் 5வது இடத்தைப் பிடித்தது

கிளாஸ்கோ: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் 6வது நாளான நேற்று இந்தியா 9 பதக்கங்களைத் தட்டிச் சென்றது. நடப்பு காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் இந்தியா அதிகப் பதக்கங்களை நேற்றுதான் வென்றது. அதில் 3 தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பெற்ற பதக்கங்களுடன் சேர்த்து இந்தியா இதுவரை 10 தங்கம், 15 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 36 பதக்கங்களை வென்று 5வது இடத்திற்கு முன்னேறியது. நேற்று இந்திய மல்யுத்த வீரர்கள் இருவரும், ஒரு வீராங்கனையும் தங்கப் பதக்கங்களைக் குவித்து அசத்தி விட்டனர்.

சுஷில் குமார்... இந்தியாவின் சுஷில் குமார் ஆடவர் 77 கிலோ பிரிவில் பாகிஸ்தான் வீரரைத் தோற்கடித்து தங்கத்தைப் பெற்றார். அதேபோல அமீத் குமார், வீராங்கனை வினேஷ் பொகத் ஆகியோரும் தங்கம் வென்றனர்.

துப்பாக்கிச் சுடுதலில் மேலும் 5 பதக்கங்கள்... துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் ஹர்பிரீத் சிங்கும், சஞ்சீவ் ராஜ்புத்தும் முறையே 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் மற்றும் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

3 வெண்கலம்... ஆடவர் டிராப் பிரிவில் மனவ்ஜித் சந்து, ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் ககன் நரங், மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் லஜ்ஜா கோஸ்வாமி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இதுவரை 17... நடப்பு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் இதுவரை 4 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்தத்தில் தோமருக்கு வெள்ளி... ஆடவர் மல்யுத்தப் போட்டியில் ராஜீவ் தோமர் வெள்ளிப் பதக்கத்தை நேற்று வென்றார். இவர் 125 கிலோ எடைப் பிரிவில் கனடா வீரர் கோரி ஜார்விஸிடம் தோற்று வெள்ளியுடன் திருப்தி பட்டுக் கொண்டார்.

Comments