தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா செல்வாக்கு அதிகரிப்பு: தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் வலுவான கூட்டணி

ஐதராபாத்: நாடு முழுவதும் வீசும், மோடி அலையால், வட மாநிலங்களில், பலமாக வேரூன்றியுள்ள, பா.ஜ., தென் மாநிலங்களான, கர்நாடகா, தமிழகத்தை அடுத்து, ஆந்திராவிலும் கால் பதிக்க முயற்சித்து வருகிறது. லோக்சபா தேர்தலில், பலமான கூட்டணி அமைப்பது குறித்து, ஆந்திர முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன், பா.ஜ., தலைவர்கள் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளனர்.


பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது முதலே, நாட்டின், பல பகுதிகளிலும் மோடி அலைவீசத் துவங்கியுள்ளது. குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணமான, மாநில முதல்வர், நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதன் மூலம், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என, பா.ஜ., தலைவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.


அரவணைப்பு:

பீகாரில், கடந்த, 10 ஆண்டுகளாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, லோக் ஜனசக்தி கட்சி, பா.ஜ., அணியுடன் மீண்டும் கைகோர்த்து உள்ளது. பஞ்சாபில், சிரோன்மணி அகாலிதளம்; மகாராஷ்டிராவில், சிவசேனா போன்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்துள்ள, பா.ஜ., கர்நாடகத்தில் கட்சியை விட்டு பிரிந்து சென்ற, 'முன்னாள்' முதல்வர் எடியூரப்பாவையும், அரவணைத்துக் கொண்டுள்ளது. பா.ஜ.,வை விட்டு பிரிந்து சென்ற, பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஸ்ரீராமுலுவும் கட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால், கர்நாடக அரசியலில், பா.ஜ., இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய, இரு திராவிட கட்சிகளைத் தவிர, வேறெந்த மாற்று சக்தியும் உருவாக முடியாது என்ற சூழலை, பா.ஜ., தலைமையில் அமைந்துள்ள, பலமான கூட்டணி முறியடித்துள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான, தே.மு.தி.க.,வை தன் கூட்டணியில் இணைத்துக் கொண்டதோடு, பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட, ஐந்து அரசியல் கட்சிகள், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ளன. இக்கூட்டணியை உடைக்க, எத்தனையோ சதிகள் நடந்தாலும், அனைத்து கட்சிகளுடன் சுமுகமாக பேச்சு நடத்தி, தமிழகத்தில் பலமான கூட்டணியை, பா.ஜ., அமைத்துள்ளது.
தாக்கம்:


கர்நாடகா, தமிழகத்தை அடுத்து, ஆந்திராவிலும், பலமான கூட்டணியை அமைக்க, பா.ஜ., தலைவர்கள் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பலனாக, ஆந்திர, முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு, பிரபல தெலுங்கு நடிகர், பவன் கல்யாண் ஆகியோர், பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு இசைவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மத்திய அமைச்சர், சிரஞ்சீவியின் சகோதரரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், சமீபத்தில், 'ஜன சேனா' என்ற புதிய கட்சியைத் துவங்கினார். தன் கட்சி லோக்சபா தேர்த லில் போட்டியிடும் என, அறிவித்த அவர், மாநிலம் முழுவதும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில பிரிவினையால், ஏற்கனவே மாநிலத்தில் செல்வாக்கை இழந்துள்ள காங்கிரஸ், பவன் கல்யாணின் அறிவிப்பால் கலக்கம் அடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை சந்தித்த, பவன் கல்யாண், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார்; 'மோடியை பிரதமராக்கும் வரை ஓயப்போவதில்லை' எனவும், அவர் கூறினார். 'சிரஞ்சீவியைப் போலவே, ஆந்திர திரையுலகில், பவன் கல்யாணுக்கும் கணிசமான ரசிகர்கள் இருப்பதால், லோக்சபா தேர்தலில், அவரின் கட்சி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்' என, அம்மாநில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இவர், பா.ஜ.,க்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், தென் மாநிலங்களில், பா.ஜ.,வின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. பா.ஜ., அணியில் மீண்டும் சேர விருப்பம் தெரிவித்துள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடுவுடன், அம்மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, வெங்கையா நாயுடு, பேச்சு நடத்தி வருகிறார்.

தீவிரம்: விரைவில், இரு கட்சிகளுக்கிடையிலான பேச்சில் முன்னேற்றம் ஏற்படுமானால், தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் என, அம்மாநில, இரு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், மெகா கூட்டணியை ஏற்படுத்தியது போல், ஆந்திராவிலும், பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு போன்றோருடன் இணைந்து, பா.ஜ., மெகா கூட்டணியை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இதுவரை, வட மாநிலங்களில் மட்டுமே செல்வாக்குடன் திகழும், பா.ஜ., மெல்ல மெல்ல, தென் மாநிலங்களிலும் கால் பதிக்கத் துவங்கியுள்ளது. இந்த அரசியல் நகர்வு, மத்தியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமையவும், மோடி பிரதமராவதற்கு சாதகமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

Comments