'பேச வரவில்லை; பார்க்க வந்தேன்': பழங்குடி பெண்களிடம் ராகுல் தகவல்

மண்ட்லா: மத்திய பிரதேசத்தில், தேர்தல் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், ''நான் மற்றவர்களை போல பேச வரவில்லை; உங்களை பார்த்து குறைகளை கேட்க வந்துள்ளேன்,'' என, தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும், அவரது கட்சியினர் அவரை, அடுத்த பிரதமராக தான் பார்க்கின்றனர்.
உத்தர பிரதேசத்தின், அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல், கட்சி தலைவர் என்ற முறையில், நாடு முழுவதும் சென்று, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்திய பிரதேசத்தின், மண்ட்லா மாவட்டத்துக்கு சென்ற ராகுல், பழங்குடி பெண்கள், பீடி இலைகளை சேகரிப்பதை நேரில் பார்த்தார். பின் ஒரு மரத்தடியில் அமர்ந்து, பழங்குடி பெண்களிடம் உரையாடினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், ''நான் தேர்தல் தொடர்பாக உங்களிடம் பேசவில்லை. உங்களின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளவே வந்தேன். நீங்கள் பயப்படாமல் என்னிடம் பேசுவது, மகிழ்ச்சிஅளிக்கிறது,'' என்றார். பீடி இலைகளை சேகரிப்பதில் உள்ள கஷ்டத்தையும், தங்கள் தொகுதியில் காணப்படும் தண்ணீர் தட்டுப்பாட்டையும், பழங்குடி பெண்கள், ராகுலிடம் கூறினர்.

Comments